முதுமலையில் ஆதிவாசி சிறுவனை டேய் இங்க வாடா என அதிகாரமாக அழைத்து, தனது செருப்பை கழட்டச் சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது மலைவாழ் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
அமைச்சர் தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்தாலும், சாந்தமடையாத பழங்குடி மக்கள், இது தெய்வ குற்றம்; எங்களை இழிவுபடுத்திய அமைச்சர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் செய்துள்ளதால் இந்த விவகாரம் விசுவரூபமெடுத்துள்ளது.
நீலகிரி மாவட்டம், முதுமலையில் யானைகள் புத்துணர்வு முகாமுக்கு சென்ற வனத்துறை அமைச்சர், ஆதிவாசி சிறுவன் ஒருவனை அழைத்து, தனது செருப்பை கழட்டி விடச் சொன்ன சம்பவம் பெரும் சர்ச்சையாகியுள் ளது.
மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில், டேய் இங்க வாடா என அதிகாரமாக அழைத்து, தனது கால் செருப்பை கழட்டி விடச் செய்த அமைச்சரின் செயலுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி, சகட்டுமேனிக்கு அமைச்சரை பலரும் விமர்சிக்கத் தொடங்கினர்.
இதனால் மிரண்டு போன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், என் பேரன் போல நினைத்து, சிறுவனை செருப்பை கழட்டி விடச் சொன்னேன். வேறெந்த உள்நோக்கமும் இல்லை. ஆனாலும் நான் செஞ்சது தப்புதான். மன்னிப்பும் கேட்கிறேன் என தனது செயலுக்கு விளக்கம் கொடுத்தார்.
ஆனால், ஆதிவாசி பழங்குடி மக்களோ, தாங்கள் அவமானப்படுத்தப்பட்டதாக கொந்தளித்துப் போயுள்ளனர். நேற்று மாலை மசினகுடி காவல் நிலையத்துக்கு பழங்குடி மக்கள் ஒட்டு மொத்தமாக படையெடுத்தனர்.
எங்கள் வழக்கப்படி சிறுவனை இப்படி செருப்பை கழட்ட வைத்து அவமானப்படுத்தினால் அது தெய்வக் குற்றம். அந்தச் சிறுவனுக்கு பூஜை செய்து பரிகாரம் செய்த பின்பே வீட்டிற்குள் அனுமதிக்க முடியும். எங்களை அவமானப்படுத்திய அமைச்சர் மீது சிறார் வன்கொடுமை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் செய்தனர்.
மேலும் மனித உரிமைகள் ஆணையம் , தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் ஆகியவையும், அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுவனை செருப்பை கழட்டச் சொன்ன விவகாரத்தில் இப்படி பழங்குடி மக்கள் ஒரு பக்கம் புகார் மேல் புகார் கொடுக்க, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளார். இதனால் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு சிக்கல் நீடிக்கிறது.
இதற்கிடையே, மனிதனுக்கு சுயமரியாதை, தன்மானம் என்பது தான் முக்கியம். இதையெல்லாம் அமைச்சர் திண்டுக்கல் அறிந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் திருப்பூரில் மார்க்சிஸ்ட் கட்சியின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்.
இன்று காலை திருப்பூர் பல்லடம் ரோடு காட்டன் மார்க்கெட் தபால் நிலையம் முன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.பாலா தலைமையில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு சுயமரியாதை பற்றிய புத்தகங்களை தபாலில் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு சுயமரியாதை தொடர்பான ஏராளமான புத்தகங்களை பதிவுத் தபாலில் அனுப்பி வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.