“டேய்” இங்க “வாடா”… சிறுவனை செருப்பு கட்ட வைத்த கொடுமை; அமைச்சர் சீனிவாசனின் அதிகார தாண்டவம்!!

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முதுமலை வனப் பகுதியில் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் புடை சூழ்ந்திருக்கும் போது, ஆதிவாசி சிறுவன் ஒருவனை அழைத்து தனது செருப்பை கழட்டி விடச் செய்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இப்படி, 2 ஆண்டுகளுக்கு முன்னர், முதல்வர் அலுவலக அதிகாரி ஒருவரை தனது செருப்பை கழற்றி விடச் சொன்னவர் தான் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் .இப்போது ஆதிவாசி சிறுவனை அதட்டலாக அழைத்து செருப்பை கழட்டச் சொன்னது பெரும் சர்ச்சையாகி, ஏன் மந்திரியாரே.?

 

உங்க செருப்ப கழட்ட கூடவே எடுப்பு துடுப்புகளை வைத்துக் கொள்ள வேண்டியதுதானே? பாவம் ஆதிவாசி சிறுவன் தான் கிடைத்தானா? என்று ஏகத்துக்கும் விமர்சித்து கண்டனத்துக்கு ஆளாகியுள்ளார்.

 

ஜெயலலிதா முதல்வராக இருந்தவரையில், அவருக்கு கீழ் இருந்த அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் படு கப்சிப் என அடங்கிப் போய் இருக்கும் இடம் தெரியாமல் இருந்தனர். மீடியா முன் வாய் திறக்கவே அஞ்சினர். எல்லாமே அம்மாதான் என்று அடங்கிக் கிடந்தனர்.

 

ஆனால் இப்போதோ அமைச்சர்கள் பலரும் ஏடாகூட ரகம்தான். வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டி வம்பு, சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வாடிக்கையாகிவிட்டது. இவர்களுக்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் கூட கடிவாளம் போட முடியவில்லை.

 

இதில் தென் மாவட்ட அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோரின் ரகமே தனி ரகம். ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கள் மூர்க்கத்தனம் என்றால், அமைச்சர் செல்லூர் ராஜூவோ வைகை அணை நீர் ஆவியாகாமல் இருக்க தெர்மா கோல் போட்டு மூடி காமெடி செய்கிறார்.

 

அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரோ, வச்சா குடுமி என நீண்ட தாடியுடன் இருப்பார். திடீரென மொட்டைத் தலையுடன் காட்சியளித்து ஏடாகூடம் செய்வார். அடிக்கடி அணி மாறுவதிலும், காக்கா பிடிப்பதிலும் கில்லாடி இவர். தீவிர சசிகலா ஆதரவாளராக இருந்த உதயகுமார், இப்போது ஓபிஎஸ்சின் அதிதீவிர விசுவாசியாகி, நான் சசிகலா ஆதரவாளர் இல்லை என்று இன்று கூட கூறியுள்ளார்.

 

இதில் மூத்த அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசனுக்கு வயது மூப்பு காரணமாக கொண்டுள்ளார். ஜெயலலிதா பெயரை உச்சரிக்க வேண்டிய இடத்தில் கருணாநிதி என்பார். பிரதமர் மோடிக்குப் பதில் மன்மோகன் சிங் என்பார்.

 

ராஜீவ் காந்தியை ராகுல் காந்தி என்பார்.கடந்த மக்களவைத் தேர்தலின் போது, திண்டுக்கல்லில் அதிமுக கூட்டணியில் பாமக மாம்பழம் சின்னத்தில் நிற்க, பிரச்சாரத்தில் மேடைக்கு மேடை ஆப்பிள் சின்னத்துக்கும், இரட்டை இலைக்கும் ஓட்டுக் கேட்டார். இதனால் ஒரு கட்டத்தில் பாமக வேட்பாளரே உச்சகட்ட டென்ஷனானார் என்றால் பாருங்களேன்.

 

இது மட்டுமின்றி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் சமீப கால செய்கைகளும் ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு ஆளாகி வருகின்றன. இதில் உச்சகட்ட அதிர்ச்சி தான் முதுமலையில் இன்று அரங்கேறியது.

 

முதுமலை தெப்பக்காட்டில், வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு முகாமை தொடங்கி வைக்க வனத்துறை அமைச்சர் என்ற ரீதியில் திண்டுக்கல் சீனிவாசன் அதிகாரிகள் புடைசூழ சென்றார். இதில் நீலகிரி மாவட்ட பெண் ஆட்சியரான இன்ன சன்ட் திவ்யாவும் அடக்கம்.

 

முகாம் அருகே சென்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அங்கு அப்பாவியாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆதிவாசி மக்கள் கூட்டத்தில் இருந்த ஆதிவாசி சிறுவன் ஒருவனை, “டேய் இங்கே வாடா” என்று அதட்டலாக கூப்பிடுகிறார்.

 

என்ன ஏதோ என அமைச்சருடன் வந்தவர்கள் முழிக்க, அந்த சிறுவனிடம் இந்த செருப்பு பொக்கில்ஷை மாட்டி விடுடா என்கிறார். இதைப் பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்த பெண் ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா, தமது முகத்தையே திருப்பிக் கொண்டார்.

அமைச்சருடன் வந்த மற்றவர்களோ, யாரும் படம் பிடித்து விடக் கூடாது என ஓடோடிச் சென்று, அமைச்சரை சுற்றி நின்று மறைக்கின்றனர். அந்த ஆதிவாசி சிறுவன் செருப்பை சரி செய்த பின் அமைச்சர் கூலாக நடந்து செல்கிறார்.

 

ஆதிவாசி சிறுவனை அதிகாரமாக அழைத்து அதிகாரிகள் முன்னிலையில், தமது செருப்பை மாட்டச் சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் இந்த அடாவடிச் செயல் , அங்குள்ள ஆதிவாசி மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.

 

அது மட்டுமின்றி இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, நெட்டிசன்கள் ஏகத்துக்கும் அமைச்சரை விமர்சித்து வருகின்றனர். இதே போன்று 2 வருடங்களுக்கு முன் சென்னையில் அரசு விழா ஒன்றில், முதல்வர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவரை, தனது செருப்பை கழட்டச் சொல்லி சர்ச்சைக்கு ஆளானவர்தான் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இப்படி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செயல் சர்ச்சையான நிலையில் இதற்கு அவர் அவசரமாக விளக்கம் கூறியுள்ளார்.

 

என்னுடைய பேரன் போல் நினைத்துதான் காலணியை கழற்ற சொன்னேன்; இதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என தடாலடியாக விளக்கம் கொடுத்து
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சமாளித்துள்ளார்.


Leave a Reply