--- --:--:-- --

அ.தி.மு.க 6 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா வழக்கு!

10

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க, நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தி நிலவியது.

 

கொறடா உத்தரவை மீறி, த.வெ.க அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள், மதுராந்தகம் – மரகதம் குமரவேல், தாராபுரம் – சத்தியபாமா, அம்பாசமுத்திரம் – இசக்கி சுப்பையா, பெருந்துறை – ஜெயக்குமார், கரூர் – எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை – சி.விஜயபாஸ்கர் ஆகியோர் அடுத்தடுத்து தனது பதவிகளை ராஜினாமா செய்து த.வெ.க-வில் இணைந்தனர்.

 

 

இந்நிலையில், ராஜினாமா செய்த 6 அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ.க்களிடம் தேர்தல் செலவை வசூலிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.காசி ராமலிங்கம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 6 பேரும் கொள்கை ரீதியாக தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யவில்லை. மாறாக, அமைச்சர் பதவி, அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு உள்ளிட்ட ஆதாயங்களுக்காகவும், தகுதி நீக்க நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவும் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்பட்டது.

 

 

பொதுத்தேர்தல் முடிந்த சில மாதங்களில் இடைத்தேர்தல் நடத்துவதால், அரசுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தல் பணிகளுக்காக ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், காவல் துறையினரின் மனித சக்தி வீணடிக்கப்பட உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

 

 

அப்போது, இதே கோரிக்கையுடன் வழக்கறிஞர் சுதன் என்பவர் தாக்கல் செய்த வழக்கை, தள்ளுபடி செய்து கடந்த 24 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து வழக்கில் வாதங்களை முன் வைக்க விரும்பினால் வழக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்படும் என, நீதிபதிகள் எச்சரித்தனர்.

 

 

இருப்பினும் மனுதாரர் தரப்பில் தொடர்ந்து வாதங்கள் முன் வைக்கப்பட்டதை அடுத்து, விளம்பரத்துக்காக தாக்கல் செய்துள்ளதாக கூறி, வழக்கை ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அபராதத்தொகையை 4 வாரங்களில் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு செலுத்த வேண்டும் எனவும், இல்லாவிட்டால் அபராதத்தை வசூலிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon