அடேங்கப்பா என்னா பல்டி…! “நான் சசிகலா ஆதரவாளர் இல்லை!” – சொல்வது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தான்!!
ஜெயலலிதா மறைவுக்குப் பின், சசிகலா தான் முதல்வராக வேண்டும் என முதல் முதலாக திருவாய் மலர்ந்து ஓபிஎஸ்சின் முதல்வர் பதவி பணால் ஆவதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தான். இப்போது தாம் ஒன்றும் சசிகலா ஆதரவாளர் இல்லை என்று திடீர் பல்டி அடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த 2016 மே மாதம் தொடர்ந்து 2-வது முறையாக முதல்வர் அரியணை ஏறிய ஜெயலலிதா, 4 மாதத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு செப்டம்பரில் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.
ஏறத்தாழ 3 மாதங்கள் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா டிசம்பர் 5-ந் தேதி மரணமடைந்தார். ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாத போது, தற்காலிகமாக முதல்வர் பொறுப்பை கவனித்து வந்தவர் ஓபிஎஸ். ஜெயலலிதா மறைந்த தினத்தில் ஓபிஎஸ் முதல்வராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்பார்.
அவருடன் ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த அத்தனை அமைச்சர்களும் மீண்டும் பதவியேற்றனர். இதற்கு, ஜெயலலிதாவால் அமைச்சராக்கப்பட்டவர்கள் அப்படியே தொடர்கின்றனர் என்ற காரணமும் கூறப்பட்டது.
ஜெயலலிதா இறந்த அதே டிசம்பர் மாத இறுதியில், அதிமுக செயற்குழு, பொதுக்குழு அவசரமாகக் கூட்டப்பட்டது. இதில் கட்சியில் ஜெயலலிதா வகித்த பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.
பொதுச் செயலாளர் பதவியேற்ற ஒரு மாதத்தில், சசிகலாவை முதல்வர் நாற்காலியிலும் அமரச் செய்ய வேண்டும் என அவருடைய தீவிர விசுவாசிகள் கங்கணம் கட்டத் தொடங்கினர். ஏனெனில் ஏற்கனவே இரு முறை ஓபிஎஸ்சை முதல்வர் நாற்காலியில் அமரச் செய்தவர் ஜெயலலிதா.
இப்போதும் ஓபிஎஸ் முதல்வராக தொடர்ந்தால், அவரிடம் தங்கள் பாச்சா பழிக்காமல் போய்விடும் என்ற அச்சத்தில் சசிகலா ஆதரவு அமைச்சர்கள் பலர், ஓபிஎஸ்சை கழட்டி விட முடிவே கட்டி விட, இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தான்.
ஜெயலலிதா சமாதி முன் நின்று கொண்டு, கட்சி அதிகாரமும், ஆட்சி அதிகாரமும் ஜெயலலிதா வசம் இருந்தது போல, இப்போது சசிகலா வசமாக வேண்டும். சசிகலா முதல்வராகவும் ஆவது தான் நல்லது.

அதுதான் ஒட்டு மொத்த அதிமுகவினரின் விருப்பம் என அமைச்சர் உதயகுமார் திரி கொளுத்திப் போட, வரிசையாக அமைச்சர்களும் சரவெடி போல் இதையே டமால் டமால் என உச்சரிக்க, அடுத்த சில நாட்களில் ஓபிஎஸ்சின் முதல்வர் பதவி பணால் ஆனது.
தமது முதல்வர் பதவி வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டதால், ஓபிஎஸ், ஜெயலலிதா சமாதியில் தியானத்தில் அமர்ந்து தர்மயுத்தம் நடத்த, அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டது.
ஆனால், பெரும்பான்மை அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சசிகலா பின்னால் அணிவகுத்து, கூவத்தூர் கூத்து எல்லாம் அரங்கேறி , அங்கு சசிகலாவை முதல்வராக தேர்வு செய்தனர். ஆனால் அச்சமயம் மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜகவோ, ஓபிஎஸ்சுக்கு ரொம்ப சப்போர்ட்டாகவே இருந்தது.
இதனால் சசிகலாவை ஆட்சியமைக்க அழைப்பு விடுவதில் அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர்ராவ் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடினார். மும்பையிலிருந்து சென்னை வர ஆளுநர் தாமதம் செய்த இடைப்பட்ட நாட்களில், சசிகலாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு மேல் முறையீட்டில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்து விட்டது.
அதில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட, முதல்வராக பந்தாவாக கோட்டைக்கு செல்ல முடியாமல், தண்டனைக் கைதியாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு செல்ல வேண்டிய சோகம் உருவானது.
இதனால், அவசர, அவசரமாக கூவத்தூரில் வைத்தே எடப்பாடியை முதல்வராக ஆசீர்வாதம் செய்து, அமைச்சர்கள் பட்டியலையும் தயார் செய்து கொடுத்து விட்டு சிறைக்கு கிளம்ப சசிகலா தயாரானார்.
அப்போது சசிகலாவின் காலில் தவழ்ந்து சென்று விழுந்து வணங்கி, கண்ணீர் மழை பொழிய சோகமே உருவாக வழி அனுப்பி வைத்த முதல்வரும் ஒட்டு மொத்த அமைச்சர்களும், என்றைக்கும் உங்களுக்கு விசுவாசமாகவே இருப்போம் என்று சபதமேற்காத குறையாக கூறினர்.
ஆனால், சசிகலா சிறை சென்று 3 ஆண்டுகள் இப்போது முடியப் போகிறது.இடைப்பட்ட இந்த 3 ஆண்டுகளில், சசிகலா அன் கோ கட்சியை விட்டு நீக்கப்பட்டது, ஓபிஎஸ் மீண்டும் இணைந்து கட்சிக்கு தலைமையேற்றது, டிடிவி தினகரன் தனிக் கட்சி தொடங்கியது,18 அதிமுக எம்எல்ஏக்கள் பதவி பறிக்கப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தது என அதிமுகவில் என்னென்னவோ கூத்துகள் அரங்கேறி விட்டன. ஆனால் ஆட்சி மட்டும் ஜம்மென்று பீடு நடைபோடுகிறது. இதற்கெல்லாம் மத்தியில் உள்ள பாஜகவுடன் வளைந்து கொடுத்து அதிமுக ஒத்துப்போனது தான் காரணம் என்றும் கூறலாம்.
மத்திய அரசின் திட்டங்களுக்கு எல்லாம் கண்ணை மூடி அதிமுக அரசு ஆதரித்து வருவதும் கண்கூடாகவே தெரிகிறது.
அது மட்டுமின்றி அமைச்சர்கள் பலரும், இந்த 3 ஆண்டுகளில் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப தங்கள் இஷ்டத்துக்கு பாஜகவுக்கு ஜால்ரா அடிப்பது போல பேச ஆரம்பித்து விட்டனர்.
அதிலும் தென்மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு ஆகியோரின் பேச்சுக்கள் காமெடி ரகமாகவும் சமயத்தில் வில்லத்தனமாகவும் கூட ஆகி விடுகிறது. இவர்கள் எல்லாருமே சசிகலா தயவில் அமைச்சர்கள் ஆனவர்கள்.
இதில் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கள் தான் ரொம்பவே ஏடாகூடம் எனலாம். பாஜக வையும் அதன் தலைவர்களையும், தலையில் வைத்து கொண்டாடுவது போல் பேசி, சில நேரங்களில் வம்பாகவும் போய் விடுகிறது.
இப்படியே 3 ஆண்டுகள் கழிந்த நிலையில், சசிகலாவின் சிறைத் தண்டனை இன்னும் ஓராண்டுக்குள் முடிவடைய உள்ளது. அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னர் சசிகலா வெளியில் வர உள்ள நிலையில், முன்னர் அவருடைய தீவிர விசுவாசிகளாக இருந்து இப்போது மறந்து விட்ட அமைச்சர்கள் பலருக்கும் பீதி கிளம்பி விட்டது போல் தெரிகிறது. இதனால் மீண்டும் சசிகலா பற்றிய பேச்சுக்கள் எழத் தொடங்கியுள்ளது.
சில நாட்களுக்கு முன் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சசிகலா சிறையில் இருப்பது வேதனையளிப்பதாக உள்ளது. அவர் சிறையில் இருந்து வெளியில் வர பிரார்த்திக்கிறேன் என்று தடாலடியாக கூறி தனது சசிகலா மீதான விசுவாசத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் இதற்கு நேர்மாறாக உள்ளது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று கூறியுள்ளது எனலாம். நான் ஒன்றும் சசிகலா ஆதரவாளர் இல்லை. ஜெயலலிதா மறைவிற்குப் பின், சசிகலா முதல்வராக வேண்டும் என தாம் மட்டும் கூறவில்லை. இந்த நாடே கூறியது என ஒரே போடாக பிளேட்டை திருப்பிப் போட்டுள்ளார்.

சசிகலா சிறை சென்ற பின், முதல்வர் எடப்பாடியின் தீவிர ஆதரவாளராகவே வலம் வந்தவர் தான் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். அவருடைய மதுரை மாவட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களை ஆரம்பத்தில் ஓரம் கட்டியே வந்தார்.
ஆனால், என்ன நடந்ததோ? கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் இருந்தே அதிதீவிர ஓபிஎஸ் ஆதரவாளராகவே மாறிவிட்டார். ஓபிஎஸ் மூலம், மதுரை புறநகர் மாவட்டத்தை பிரிக்கச் செய்து, புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளரானார் உதயகுமார். தேனி மக்களவைத் தொகுதியில் ஓபிஎஸ் மகனுக்காக ராப்பகலாக உழைத்து, வெற்றி பெறச் செய்ததிலும் இவருடைய பங்கு தான் அதிகம்.
இப்போது சசிகலா வெளியில் வந்தால், முதல்வர் எடப்பாடி உள்ளிட்ட பலரும் அவரிடம் சரண்டர் ஆகிவிடுவார்கள் என்று பேச்சுகள் எழுந்து வருகிறது .அதற்கேற்ப சசிகலா பற்றி, எடப்பாடி தொடர் மவுனம் சாதித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஓபிஎஸ் நிலை அப்படியில்லை. சசிகலா – ஓபிஎஸ் இடையிலான பழைய பகை அப்படியே இன்னும் தொடரவே செய்கிறது என்ற நிலையில், அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், தாம் சசிகலா ஆதரவாளர் இல்லை என்று பகிரங்கமாகவே கூறியுள்ளது உற்று கவனிக்கக் கூடிய ஒன்று.
சசிகலாவிடம் எடப்பாடி தரப்பு சரணடையும் பட்சத்தில், மீண்டும் ஒரு தர்ம யுத்தத்துக்கு ஓபிஎஸ்.தயாராகிறாரோ? என்றும் பார்க்கப்படுகிறது. அதன் ஒரு வெளிப்பாடு தான் அவரது ஆதரவு அமைச்சர் உதயக்குமார், நான் ஒன்றும் சசிகலா ஆதரவாளர் என்று கூறியிருப்பதன் மூலம் தெரியவருவதாகவும் கூறப்படுகிறது.
எப்படியும் சசிகலா வெளியில் வரும் போது, அதிமுகவில் ஒரு பிரளயம் உண்டு என்றே அக் கட்சியில் உள்ள நடுநிலைவாதிகள் முணுமுணுப்பதும் தெரிகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




