--- --:--:-- --

இடைத்தேர்தலுக்கு காரணம் திமுக, அதிமுகவின் மறைமுக கூட்டணி தான்!

4

தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்ததற்கு காரணம் திமுக – அதிமுகவின் மறைமுக கூட்டணி பேச்சுவார்த்தை தான் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குற்றம்சாட்டியுள்ளார். தாராபுரம் இடைத்தேர்தல் பணிகளுக்காக வருகை புரிந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக கொள்கை கட்சி என்று கூறிக்கொண்டு தற்பொழுது வரை ஒரு கொள்கை ரீதியான பிரச்சாரத்தை முன்னெடுத்ததில்லை.

 

 

தேர்தல் வரும்பொழுது அவதூறுகளையும் ஆபாசங்களையும், பெண்களை மையப்படுத்திய ஆபாசமான பிரச்சாரங்களை உருவாக்குகிறார்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இருக்கும் பொழுதும் திமுகவினர் அதுபோன்றுதான் பிரச்சாரத்தை முன்னெடுத்ததாகவும், அவர் இருக்கும் பொழுது எந்த தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றது கிடையாது என்று சுட்டிக்காட்டினார்.

 

 

அதேபோன்று ஜெயலலிதா அம்மையாரையும் கடுமையான வார்த்தைகளால் தனிப்பட்ட வாழ்க்கையை குறிப்பிட்டு பிரச்சாரங்களை மேற்கொண்டார்கள். சட்டசபையிலேயே ஒரு பெண் என்றும் பாராமல் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்ன செய்தார் என்று அனைவருக்கும் தெரியும். தற்பொழுது உதயநிதி ஸ்டாலின் பெண்களை நோக்கிய, தனிப்பட்ட வாழ்க்கையை நோக்கிய பிரச்சாரங்களை மட்டுமே முன்னெடுத்து வருகிறார்.

 

 

கடந்த ஐந்து வருட அவர்களது ஆட்சியை கூறி ஓட்டு கேட்டது கிடையாது, அப்படி ஓட்டு கேட்டும் இந்த முறை அவர்களுடைய கூட்டணி மற்றும் பண பலத்தை மக்கள் தூக்கி எறிந்து விட்டார்கள். இது போன்ற ஆபாசமான பேச்சுக்களை மக்களும் குறிப்பாக கொங்கு மண்டல மகளிரும் தூக்கி எறிவார்கள் என்றும் தெரிவித்தார்.

 

இதில் ஒரு வருத்தமான செயல் என்னவென்றால், பழனிசாமி அவரும் முதல்வர் விஜய் குறித்து தனிப்பட்ட வாழ்க்கை குறித்து திமுகவுடன் இணைந்த பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இன்று உள்ள அதிமுக என்பது புரட்சித் தலைவரால் உருவாக்கப்பட்ட அதிமுக கிடையாது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்த விசுவாசமான அமைச்சர்கள் அனைவரும் தற்பொழுது அதிமுகவிலிருந்து வெளியேறி விட்டனர். தற்பொழுது அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது மகன் மிதுன் மட்டும்தான் இருக்கிறார்கள்.

 

 

மிதுன் அதிமுகவை வழி நடத்துவதால் தான் அங்கு இருக்கக்கூடிய முக்கியமானவர்கள் அனைவரும் வெளியேறியதாக தெரிவித்தார். நடந்து முடிந்த தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 25 தொகுதிகளில் தன்னிச்சையாக வெற்றி பெற்றது. ஆனால் அதிமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவு பெற்று வெறும் 15 தொகுதிகளை மட்டுமே கொங்கு மண்டலத்தில் பெற்றது என்று தெரிவித்த அவர், மக்கள் அதிமுகவை புறக்கணித்து விட்டார்கள் என்று கூறினார்.

 

 

மதுராந்தகம் தாராபுரத்தில் திமுக அதிமுகவிற்கு வாக்கு கேட்பதாகவும், அதிமுக திமுகவிற்கு வாக்கு கேட்பதாகவும் விமர்சித்த அவர், மிதுனுக்கு இந்த கட்சியை அடமானம் தர வேண்டும் என்பதற்காக இவ்வாறு செயல்படுவதாக சுட்டி காட்டினார். ஜெயலலிதா அவர்களின் சொத்தை கைப்பற்றுவதற்காக எடப்பாடி பழனிசாமி அவரது மகன் மிதுனைக் கொண்டு வருவதற்காக உதயநிதி உடன் திமுக, அதிமுக சேர்ந்தது என்று தெரிவித்தார்.

 

எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் ஆக்குவதற்கு கட்சியில் உள்ளவர்கள் கடுமையாக உழைத்தார்கள். ஆனால் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஆன பிறகு முக்கியமானவர்களை எல்லாம் எடப்பாடி பழனிசாமி நீக்கிவிட்டார். எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கை செங்கோட்டையன் அவரது இல்லத்தில் இருந்து தான் துவங்கியதாக குறிப்பிட்ட அவர், ஆனால் அவரையே கட்சியிலிருந்து நீக்கி விட்டார்கள். ஆனால் செங்கோட்டையன் அவரை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று எங்களுடைய முதலமைச்சர் புரிந்து கொண்டு தொகுதிகளில் காசை கொடுக்காமல் வெற்றி பெற்றுள்ளோம் என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon