--- --:--:-- --

விஜய்க்கு எச்சரிக்கை விடுத்த பட்டினப்பாக்கம் மீனவர்கள்!

12

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கடந்த மாதத்தில் நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடரில் 110 விதியின் கீழ் , தமிழ்நாட்டுக்கு புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இதற்காக சுமார் ரூ.1,200 கோடி செலவில் பிரம்மாண்டமான நிர்வாக வளாகம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. பட்டினப்பாக்கத்தில் அமைய உள்ள புதிய நிர்வாக வளாகம் சுமார் 20 லட்சம் சதுர அடி கட்டுமானப் பரப்பில் உருவாக்கப்பட உள்ளது. இதற்காக 26 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை தொடர்புடைய நிலங்கள் இந்தத் திட்டத்துக்காக பயன்படுத்தப்பட உள்ளன. திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளன. கட்டிட வடிவமைப்பு, விரிவான திட்ட அறிக்கை, கட்டுமான திட்டமிடல், சுற்றுச்சூழல் அம்சங்கள் மற்றும் போக்குவரத்து வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

 

 

புதிய தலைமைச் செயலகம் எந்த இடத்தில் அமையும் என்பது தொடர்பாக நந்தம்பாக்கம், கிண்டி ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகின. தற்போது பட்டினப்பாக்கம் தேர்வு செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. கடலை ஒட்டிய முக்கியமான பகுதியில் இந்தப் புதிய நிர்வாக வளாகம் அமைய இருப்பதால், இடத் தேர்வு குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன. நிர்வாக ரீதியாக இது முக்கியமான திட்டமாக பார்க்கப்பட்டாலும், போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த அம்சங்கள் குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.

 

 

இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்திற்கு அப்பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதேபோல், அரசியல் தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். இந்த நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரி இன்று மீனவர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

 

முள்ளிக்குப்பம் சீனிவாசபுரம் மீனவர் பஞ்சாயத்து சபை மற்றும் முள்ளிமாநகர் மீனவர் பஞ்சாயத்து சபை தலைமையில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அரசாணை எண் 564-ஐ உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தியும், முள்ளிக்குப்பம் மற்றும் முள்ளிமாநகர் மீனவர்களுக்கு சொந்தமான பூர்வீக நிலத்தை பட்டாவுடன் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முள்ளிக்குப்பம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில் ஏராளமான மீனவர்கள் குடும்பத்துடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

 

இதுபற்றி செய்தியாளர்களிடம் மீனவப் பிரதிநிதிகள் பேசுகையில், “விஜய்க்கு 5 நாள் அவகாசம் தருகிறோம். அதற்குள் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால், தமிழ்நாடு முழுதும் உள்ள மீனவ கிராமங்களில் பெரிய போராட்டம் நடத்துவோம். தமிழ்நாடே கொந்தளிச்சு ஸ்தம்பிக்கும். முதல்வர் விஜய் மீண்டும் 1985 வரலாற்றை நடக்க வைத்துவிடாது” என்று ஆவேசமாக தெரிவித்தனர்.

 

மீனவர்கள் குறிப்பிட்ட 1985 வரலாறு என்பது, தமிழக அரசியல் மற்றும் மெரினா கடற்கரை வரலாற்றில் மறக்க முடியாத ஒரு ரத்தக்களரிப் பக்கத்தைக் குறிக்கிறது. 1985-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், மெரினா கடற்கரையைச் சர்வதேச அளவுக்கு அழகுபடுத்தும் திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டது. பொதுமக்கள் நடைபயிற்சி செய்யவும், சுற்றுலாப் பயணிகள் பார்க்கவும் கடற்கரையைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு கருதியது.

 

 

அதன் ஒரு பகுதியாக, 1985 நவம்பர் 4-ஆம் தேதி அதிகாலை நேரத்தில், மாநகராட்சி அதிகாரிகளும் போலீசாரும் புல்டோசர்களுடன் மெரினா கடற்கரைக்கு வந்தனர். அயோத்திக்குப்பம், நொச்சிக்குப்பம் போன்ற பகுதிகளில் மணலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான கட்டுமரங்கள், மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்களை முன்னறிவிப்பின்றி அள்ளிச் சென்று பறிமுதல் செய்தனர்.

 

தங்கள் வாழ்வாதாரக் கருவிகள் பறிக்கப்பட்டதைக் கண்ட மீனவ மக்கள் கொதித்தெழுந்தனர். நவம்பர் 5-ஆம் தேதி மெரினா காமராஜர் சாலையில் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. அந்தப் போராட்டத்தின்போது அன்னம்மாள் என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அடுத்த இரண்டு நாட்களில், கோதண்டபாணி என்ற இளம் மீனவர் தலைமைச் செயலகம் (செயின்ட் ஜார்ஜ் கோட்டை) எதிரே தனது உடலில் தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்று, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

 

இந்த அடுத்தடுத்த மரணங்கள் மீனவ கிராமங்களை ஒட்டுமொத்தமாகக் கொந்தளிக்க வைத்தன. ஒரு மாத காலம் தொடர்ந்த பதற்றத்தின் உச்சகட்டமாக, 1985 டிசம்பர் 4 அன்று மெரினா கடற்கரை போர்க்களமாக மாறியது. பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் காமராஜர் சாலையில் திரண்டனர். போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். நிலைமை கைமீறிப் போகவே, போலீசார் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தக் கொடூர துப்பாக்கிச்சூட்டில் 5-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; ஏராளமானோர் குண்டு காயமடைந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon