மறக்க வேண்டிய சம்பவம் என கூறி விட்டு ஞாபகப்படுத்துவதா..? ரஜினிக்கு அதிமுகவும் கண்டனம்!!
பெரியார் குறித்து ரஜினி பேசியிருப்பது குறித்து அதிமுக தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறக்கப்பட வேண்டிய சம்பவம் எனக் கூறி விட்டு அதை ஞாபகப்படுத்துவதா? என அமைச்சர் ஜெயக்குமார் கண்டித்துள்ளார்.
ரஜினியின் கருத்து என்றாலே அது தீயாக பரவி சர்ச்சையாவது வாடிக்கைதான். இப்போது பெரியார் பற்றி தாம் கூறியது உண்மைதான். பத்திரிகை செய்தி ஆதாரப்படி பேசினேன்.
எனவே 1971-ல் நடந்தது மறுக்கப்பL வேண்டிய சம்பவம் இல்லை; ஆனால் மறக்கப்பட வேண்டியது என்று கூறி, தாம் பேசியதற்கு மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறி விட்டார்.
இதனால் 1971-ல் சேலத்தில் பெரியார் தலைமையில் நடந்த தி.க.பேரணியில் ராமர், சீதை சிலைகள் நிர்வாணமாக கொண்டு செல்லப்பட்டதா? செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதா? என்ற சர்ச்சைக்கு ஆம் / இல்லை என்ற ரீதியில் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.
ஆளாளுக்கு தங்கள் வசதிக்கேற்ப கருத்து கூறுவதால் உண்மையில் நடந்தது என்ன? என்பது குறித்து பெரும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

பெரியார் குறித்து ரஜினி கூறியதற்கும், மன்னிப்பும் கேட்க மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், ரஜினிக்கு ஆதரவாக பாஜக தரப்பில் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் பெரியார் இயக்கத்தினர் கொந்தளிப்பில் உள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினோ, பெரியாரைப் பற்றி பேசும் முன் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் என நாசூக்காக அட்வைஸ் கூறியிருந்தார். இப்போது அதிமுக தரப்பிலும் ரஜினியின் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,
மறக்க வேண்டிய சம்பவம் எனக் கூறி மீண்டும் அதை ரஜினி ஞாபகப்படுத்தி உள்ளார். ரஜினியின் பேச்சில் பல முரண்பாடுகள் உள்ளன.
பழைய நிகழ்வுகளைப் பற்றி பேசுவதால் ரஜினிக்கு பிஎச்டி பட்டமா கொடுக்கப் போகிறார்கள்? ரஜினிக்கு ஏன் தேவையில்லாத இந்த ஆராய்ச்சி?. அனைவரும் மதிக்கும் பெரியார் குறித்து ரஜினி பேசியது கண்டனத்துக்குரியது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




