‘பாஸ்டேக்’ இல்லையா..? ‘இரு மடங்கு’ கட்டணம் வசூல்..!டோல்கேட்களில் அடுத்த ‘கெடுபிடி’ ஆரம்பம்!!

பாஸ்டேக் இல்லாமல் சென்றால் டோல்கேட்களில் இரு மடங்கு கட்டணம் வசூல் என்ற கெடுபிடி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் பாஸ்டேக் எடுக்காத சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் கூட இரு மடங்கு கட்டணத்தை தண்டமாக அழ வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.

 

டோல்கேட்களில் வாகன நெரிசலை குறைப்பதற்காகவும், முறைகேடுகளை தடுக்க என்று கூறியும் பணமில்லா பரிவர்த்தனை என்ற பெயரில் பாஸ்டேக் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. கடந்த 15-ந்தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம் என்பதும் அமலுக்கு வந்து விட்டது.

 

இதனால் செல்போன் ரீசார்ஜ் செய்வது போல் பாஸ் டேக்கில் எந்த நேரமும் பணம் இருப்பு இருக்க வேண்டும். பாஸ்டேக்கில் பணம் இல்லையென்றாலோ, பாஸ்டேக் எடுக்கவில்லை என்றாலோ இரு மடங்கு கட்டணத்தை ரொக்கமாக செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

 

பொங்கல் விடுமுறை வந்ததால் கடந்த சில தினங்களாக அபராதம் வசூலிக்காமல் சலுகை வழங்கப்பட்டது.இந்நிலையில் இன்று முதல் பாஸ்டேக் இல்லையென்றால் அபராதம் வசூலிப்பதை தொடங்கி விட்டனர். அதே போல் 24 மணி நேரத்திற்குள் அதே வழியில் திரும்பும் வாகனங்களுக்கு இரு வழி கட்டண சலுகையும் ரத்தாகி விட்டது.

 

இந்த சலுகை பாஸ்டேக் இருந்தால் மட்டுமே செல்லுபடியாகும்.பாஸ் டேக் இல்லாதவர்கள் ஒவ்வொரு டோல்கேட் களிலும் இரு மடங்கு கட்டணத்தை தண்டம் அழுது விட்டே கடக்க வேண்டியுள்ளது. இதனால் எப்போதோ ஒரு முறை சொந்த வாகனத்தில் வெளியூர் செல்லும் வாகன உரிமையாளர்கள் தான் பரிதவிப்புக்கு ஆளாகி புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


Leave a Reply