தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது..? பதவிக்காக பலரும்கோவை ராகவன் ராமநாதபுரம் குப்புசாமி சுப்புராம் மல்லுக்கட்டு…! முடிவு எடுப்பதில் தொடரும் இழுபறி!!

தமிழக பாஜக தலைவர் பதவியை கைப்பற்ற தமிழக பாஜக முக்கியப் புள்ளிகள் பலரும் முட்டி மோதுவதால் நியமன அறிவிப்பு வெளியாவது இழுபறியாகவே உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் யாருக்கு தலைவர் பதவி அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது என தமிழக பாஜக வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அது முதல் கடந்த ஆறு மாதங்களாக தமிழக பாஜக தலைவர் பதவி காலியாகவே உள்ளது. முறைப்படி தேர்தல் நடத்தி டிசம்பர் மாத இறுதிக்குள் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்டு வந்தது.

 

மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்துள்ளதால், தமிழகத்தில் இந்தப் பதவியை பிடிக்க முன்னாள் தலைவர்களான பொன். ராதாகிருஷ்ணன், கோவை சி.பி ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீண்டும் முயற்சித்தனர். அதேபோல் இந்தப் பதவியை கைப்பற்ற பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில துணைத் தலைவர் ராமநாதபுரம் குப்புராம், மாநில செயலாளர் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், கோவை முருகானந்தம், ராகவன் என பலரும் முட்டி மோதினர். நடிகர் எஸ்.வி.சேகரும், தமக்கு தலைவர் பதவி கொடுத்தால் சிறப்பாக செயல்படுவேன் எனக் கூறியதுடன் தனது பெயரும் பட்டியலில் உள்ளதாக கூறி தன் பங்குக்கு பரபரப்பை கிளப்பினார்.

 

இதனால் பாஜக தலைவர் யார் என்பதை முடிவு செய்வதில் டெல்லி மேலிடம் ரொம்பவே திணறித்தான் போய்விட்டது. தங்கள் ஆதரவு டெல்லி மேலிடத் தலைவர்கள் மூலம் ஆளாளுக்கு தங்கள் செல்வாக்கை நிரூபிக்க முயன்றதால் தலைவர் நியமனம் தள்ளிப் போய்க் கொண்டே உள்ளது. முதலில் பொங்கலுக்கு முன்னரே புதிய தலைவர் அறிவிப்பு வெளியாகும் என பரபரப்பு தகவல் வெளியானது. அதன் பின் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது. சென்னை பாஜக அலுவலகத்தில், டெல்லி மேலிடப் பிரதிநிதி மூலம் தலைவர் அறிவிப்பு வெளியாகப் போவதாக செய்தி வெளியாகி பெரும் எதிர்பார்ப்பானது .ஆனால் அன்றும் அறிவிப்பு வெளியிடப்படாமல் இழுபறியாகி ஏமாற்றமே மிஞ்சியது.

 

தற்போதைய நிலையில் தமிழக பாஜக தலைவருக்கான பட்டியலில் எச்.ராஜா, குப்புராம், நயினார் நாகேந்திரன், கோவை முருகானந்தம் ஆகியோரின் பெயர் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகிறது. இவர்களில் ஒருவர்தான் தலைவர் என்றாலும் யார் அந்த அதிர்ஷ்டசாலி என்பது இன்னும் கேள்விக்குரியதாகவே உள்ளதாம்.


Leave a Reply