குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்ததாக சர்ச்சை வெளியான நிலையில், ஒட்டு மொத்த தேர்வும் ரத்து செய்யப்படுமா? என்பது குறித்து நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இதனால் தேர்வில் வெற்றி பெற்ற 9,300 பேரும் கலக்கத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், பல்வேறு துறைகளில் உள்ள இளநிலை உதவியாளர் மற்றும் நில அளவை உதவியாளர் பணிகளுக்காக டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. சுமார் 9,300 பேரை தேர்வு செய்ய கடந்த செப்டம்பரில் குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. இதில் 16 லட்சம் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் கடந்த நவம்பரில் வெளியானது.
இதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பிட்ட இரண்டு மையங்களில் தேர்வு எழுதிய 40 பேர் தமிழக அளவில் முதல் 100 இடங்களுக்குள் தேர்வானது பெரும் சந்தேகத்தை எழுப்பியது. மேலும் இந்த மையங்களில் தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலானோர் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் சந்தேகத்தை அதிகரித்தது.அத்துடன் இந்தத் தேர்வில் முதலிடம் பிடித்த சிவகங்கையைச் சேர்ந்த திருவராஜ் என்ற 46 வயது பட்டதாரியும் இங்கு தான் தேர்வு எழுதி இருந்தார். ஆடு மேய்க்கும் திருவராஜ், இதற்கு முன் 7 முறை டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி தோல்வி கண்டவர். இவர் இம்முறை முதலிடம் பெற்றது எப்படி? என்ற கேள்வியும் எழுந்தது.
இதனால் இந்த தேர்வு மையங்களில் முறைகேடு நடைபெற்றிருக்கலாம் என புகார்கள் குவிந்ததால், டிஎன்பிஎஸ்சியும் விசாரணையில் இறங்கியது. டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் நேரில் வந்து இரு மையங்களிலும் விசாரணை நடத்தினார். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய மையங்களில் தேர்வு எழுதியவர்கள் மற்றும் தேர்வு கண்காணிப்பில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்திய நந்தகுமார், தேர்வில் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்ததாக தெரிகிறது.
இதனால் தேர்வில் மாநில அளவில் 100 இடங்களில் 40 இடங்களைப் பிடித்த அனைவரையும் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு விசாரணை தீவிரபானது.சம்பந்தப்பட்ட 40 பேரிடமும் மாதிரி தேர்வு நடத்தப்பட்டதுடன், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த குரூப் 4 தேர்வு முடிவு குறித்து முக்கிய ஆலோசனை இன்று டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி தேர்வு தலைவர் சுதன், செயலாளர் நந்தகுமார், தேர்வு வாரிய உறுப்பினர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் தேர்வு தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்ப்பட்டதாகவும், நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுளளது. இதனால் குரூப் 4 தேர்வு ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்படலாம் என்று கூறப்படுவதால் தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பணி கனவில் இருந்த 9300 பேரும் கலக்கத்தில் உள்ளனர்.