டெல்லி சட்டசபை தேர்தல் : தமிழக பாணியில் இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசிய ஆம் ஆத்மி கட்சி

டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 8-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சுறுசுறுப்பாக தேர்தல் களத்தில் குதித்துள்ளன. ஆம் ஆத்மி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இலவச மின்சாரம், தரமான குடிநீர், மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணம் என தமிழக பாணியில் ஏராளமான இலவசங்களை அறிவித்துள்ளது.

 

டெல்லியில் ஆட்சியில் உள்ள கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் பதவிகாலம் அடுத்த மாதம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அங்கு அடுத்த மாதம் எட்டாம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்க ஆம் ஆத்மியும், ஆட்சியை கைப்பற்ற பாஜக மற்றும் காங்கிரஸ் தரப்பும் தீவிரம் காட்டுகின்றன. இதனால் மும்முனை போட்டி நிலவுகிறது.

 

இங்கு வரும் 21-ம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடையும் நிலையில், ஆம் ஆத்மி 70 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவித்து விட்டது. இதில் தற்போதைய எம்எல்ஏக்கள் 15 பேருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க கெஜ்ரிவால் மறுத்துவிட்டார். பாஜக முதல்கட்டமாக 57 தொகுதிகளுக்கு வேட்பாளர்களையும், காங்கிரஸ் 54 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளன. ஆனால் இந்த இரு கட்சிகளும் முதல்வர் வேட்பாளர் யார்? என்பதை முன்னிறுத்தவில்லை.

 

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில்,வேட்பாளர் பட்டியலை முதலில் அறிவித்தது போல் ஆம் ஆத்மி கட்சி தற்போது தேர்தல் அறிக்கையையும் இன்று வாக்குறுதியையும் வெளியிட்டுள்ளது.

 

இதில் டெல்லி வாசிகளுக்கு வீடுகள் தோறும் 200 யூனிட் மின்சாரம் இலவசம், மாணவர்களுக்கு இலவசப் பேருந்து பயணம், தரமான குடிநீர் மற்றும் தரமான கல்வி வழங்கப்படும் என்பது உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகளை தமிழக பாணியில் ஆம் ஆத்மி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply