டெல்டாவில் பருவம் தப்பி பெய்யும் மழை..! நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கண்ணீர்!!

தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பருவம் தவறி திடீரென பெய்து வரும் மழையால் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கண்ணீர் சிந்துகின்றனர்.

 

கடந்தாண்டு, தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் மேட்டூர் அணை நான்கு முறை நிரம்பி வழிந்தது. இதனால் டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி பணிகள் தீவிரமடைந்தன.வட கிழக்குப் பருவமழையும் கை கொடுத்ததால் பாசனத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு இன்றி பயிர் விளைச்சல் அமோகமாகி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

தற்போது பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக திடீர் திடீரென கனமழை பெய்து வருகிறது. இதனால் நெற்பயிர்கள் தலைசாய்ந்து தண்ணீரில் மூழ்கியுள்ளன. மழை நீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் தவிப்பதால் நெற்கதிர்களும் முளைவிடத் தொடங்கியுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 75 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

 

விளைந்த பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் மழைநீரை அகற்ற அரசு போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என அபய குரல் கொடுத்துள்ளனர்.


Leave a Reply