பிளாஸ்டிக் பாட்டில்களைப் போட்டால் பரிசு கூப்பன்

நெகிழிப் பொருட்களை ஒழிக்கும் நோக்கில் சென்னையில் அரசு சார்பில் நவீன குப்பை மறுசுழற்சி இயந்திரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். தமிழ்நாட்டில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

இதன் ஒரு பகுதியாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து மறுசுழற்சி செய்யும் இயந்திரத்தை கொண்டு வந்துள்ளனர். இந்த இயந்திரத்திற்குள் 250 மில்லி முதல் 2 லிட்டர் வரையிலான காலி பிளாஸ்டிக் பாட்டில்களை போடும்போது அதை மறுசுழற்சிக்கு ஏற்றவாறு அடைக்கப்பட்டு இயந்திரத்தின் அடிப்பகுதியில் சேகரித்து வைத்துக் கொள்ளப்படுகிறது.

 

இவை மறுசுழற்சி செய்யப்பட்டு அதன் மூலம் டி-ஷர்ட் தயாரிப்பு மற்றும் சாலை அமைப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன. தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் தாமாக முன்வந்து இந்த இயந்திரத்தை அவரவர் தொழில் துறை அல்லது பொது இடங்களில் வைக்க மாநகராட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

சென்னையில் மாநகராட்சி அலுவலகம், ரயில்நிலையம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட 15 மண்டலங்களில் இந்த இயந்திரத்தை அமைப்பு இருப்பதாகவும், வரும் காலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த இயந்திரத்தை வைத்து மாசில்லாத தமிழகமாக மாற்ற முடிவு செய்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Leave a Reply