“மறைமுகத் தேர்தலை வீடியோ பதிவு செய்ய வேண்டும்” உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு!!

நாளை மறுதினம் நடைபெறவுள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலை வீடியோ பதிவு செய்யக் கோரி திமுக தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரகப் பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த மாதம் 27, 30 தேதிகளில் தேர்தல் நடைபெற்றது. ஊராட்சித் தலைவர், ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் முடிந்து, வெற்றி பெற்றவர்கள் கடந்த 6-ந் தேதி பதவியேற்றனர்.

 

இந்நிலையில், மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி துணைத் தலைவர் போன்ற பதவிகளுக்கு நாளை மறுதினம் மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தற்போது வெற்றி பெற்றுள்ள அந்தந்த அமைப்புகளின் கவுன்சிலர்கள் ஓட்டுப் போட்டு இந்த நிர்வாகிகளை தேர்வு செய்யவுள்ளனர்.

 

இதனால் இந்த தேர்தலில் வெற்றி பெற மாற்றுக்கட்சி கவுன்சிலர்கள் மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் பலரை குதிரை பேரம் நடத்தி இழுப்பதும், வலுக் கட்டாயமாக இழுத்துச் செல்வதும் என கடந்த சில நாட்களாக பரபரப்பு காணப்படுகிறது.

 

இந்த மறைமுகத் தேர்தலில் கடும் போட்டி நிலவும் சில இடங்களில் அடிதடி ஏற்படலாம், மிரட்டல் மூலம் முறைகேடுகள் நடைபெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மறைமுகத் தேர்தல் நடைபெறும் போது வீடியோ பதிவு செய்ய வேண்டும் என திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

 

இதனை ஏற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, முறையாக மனு செய்தால், வழக்கை விசாரிப்பதாக தெரிவித்தார். இதனால் இந்த வழக்கு இன்று மாலை அல்லது நாளை விசாரிக்கப்படும் எனத் தெரிகிறது.


Leave a Reply