திண்டுக்கல்லில் உள்ள ஒரு தியேட்டரில் தர்பார் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால், ரஜினி ரசிகர்கள் படத்தின் பேனர்களை கிழித்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் தடியடி நடத்தி ரசிகர்களை விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரஜினி நடிப்பில் உருவான தர்பார் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று ரிலீசானது. தமிழகத்தில் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதால் அதிகாலை 4 மணிக்கே பல தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இதற்காக நேற்று இரவு முதலே தியேட்டர்களின் வாசலில் தவமிருந்த ரசிகர்கள், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக முதல் காட்சியை உற்சாகமாக கண்டுகளித்தனர்.
ஆனால், திண்டுக்கல் நாகல் நகரில் உள்ள ஒரு தியேட்டரில் படம் திரையிடுவது தாமதமானதால் ரசிகர்கள் காத்துக் கிடந்தனர். காலை 7 மணி கடந்தும் படம் திரையிடப்படாததால் பொறுமையிழந்த ரசிகர்கள் கூச்சலிட்டு ரகளையில் ஈடுபடத் தொடங்கினர். தொடர்ந்து, தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டிருந்த பிற படங்களின் பேனர்களை ஆவேசத்துடன் கிழித்தெறியத் தொடங்கினர்.
இதனால் பதற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி ரசிகர்களை விரட்டியடித்தனர். தியேட்டரில் இருந்து வெகுதூரம் வரை ரசிகர்களை துரத்திச் சென்று போலீசார் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதே போன்றுதான் கடந்த தீபாவளியின் போது விஜய் நடித்த பிகில் திரைப்படம் வெளியான போதும் அவரது ரசிகர்கள் கிருஷ்ணகிரியில் வன்முறையில் ஈடுபட்டனர். பிகில் படம் திரையிட தாமதமானதால் கடைகளை அடித்து நொறுக்கியும், தீ வைத்தும் வன்முறையில் ஈடுபட்ட விஜய் ரசிகர்களை போலீசார் தடியடி நடத்தியதுடன், பின்னர் அவர்களை தேடிப் பிடித்து கைது செய்ததும் குறிப்பிடத்தக்கது.