பொங்கல் பரிசு வாங்க ‘அலை பாயும்’ மக்கள்..! அமைச்சர் உதயகுமார் தொகுதியிலோ குழப்பமோ குழப்பம்!!

ரூ.1000 பணத்துடனான பொங்கல் பரிசுத் தொகுப்பு, தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் இன்று முதல் வழங்கப்படுகிறது. ஆனால், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொகுதியான திருமங்கலத்தில் யாருக்கும் வழங்கப்படவில்லை. விழா நடத்தி தன் கையால் தான் வழங்குவேன் என அமைச்சர் அடம் பிடிப்பதால் டோக்கன் மட்டுமே வழங்கப்பட்டு, மக்கள் அலைக்கழிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

 

குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ 1000 பணத்துடன் 6 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் ரேசன் கடைகள் முன் அதிகாலை முதலே மக்கள் வரிசை கட்டி நிற்கின்றனர்.

 

ஏற்கனவே அமைச்சர்கள் பலரும் தத்தம் தொகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தத் திட்டத்தை விழா நடத்தி தொடங்கி வைத்து, சிலருக்கு பரிசுத்தொகுப்பை வழங்கினர். இது போல் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரும் தனது தொகுதியான திருமங்கலத்தில் இந்த பரிசுத் தொகுப்பை, அரசுப்பள்ளி மைதானத்தில் விழா நடத்தி சிலருக்கு மட்டும் வழங்கினார்.

 

இந்நிலையில், இன்று முதல் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட மக்கள் ஸ்மார்ட் கார்டுகளுடன் கடைகளுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். ஆனால் ரேசன் கடைகளில் உள்ளவர்களோ இன்று பரிசுத் தொகுப்பு வழங்கப்படாது என்று கூறி அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர்.

 

இதற்குக் காரணம், தொகுதி மக்கள் அனைவருக்கும் தன் கையால் தான் ரூ 1000 ரொக்கப் பணத்தை வழங்குவேன் என அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பிடிவாதமாக கூறிவிட்டாராம். இதற்காக திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட 4 இடங்களில் பிரம்மாண்ட விழாப் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு வரும் வெள்ளி, சனி, மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் விழா நடத்தி ரூ.1000 ரொக்கப் பரிசை மட்டும் அமைச்சர் உதயக்குமார் வழங்க உள்ளாராம்.

 

எனவே இந்த விழாவில் அமைச்சர் கையால் பரிசு வாங்க விரும்புவோருக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. விழாவில் ரூ 1000 பரிசு வாங்கிய பின்னர் மீதப் பொருட்களை கடைக்கு வந்து வாங்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

 

விழாவுக்கு செல்ல விரும்பாதவர்களுக்கும் அமைச்சர் விழா முடிந்த பின்னர், திங்கட்கிழமை முதல் கடைகளில் ரொக்கப் பணத்துடனான பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று கூறி திருப்பி அனுப்பப்படுவதால் மக்கள், இப்போது கிடைக்காதா? என ஏமாற்றத்துடன் பலரும் அல்லாடுகின்றனர்.

 

மேலும் அமைச்சர் விழாவில் கால் கடுக்க பலமணி நேரம் நின்று இந்தப் பரிசை வாங்கத் தான் வேண்டுமா? கடையில் கொடுக்கும் போது வாங்கிக் கொள்கிறோம் எனக் கூறி டோக்கன் வாங்காமல் பலரும் அதிருப்தியுடன் திரும்பிச் செல்கின்றனர். தன் கையால் பரிசு வழங்கி மக்களிடம் நல்ல பெயர் வாங்கலாம் என்பது அமைச்சரின் எண்ணம். ஆனால் மக்களோ இப்போதே கொடுத்தாலே போச்சு என்ற ரீதியில் ரூ.1000 பணத்தை வாங்க அவசரம் காட்டுவதால் அமைச்சரின் எண்ணம் பழிக்காமல் போய் விட்டதோ என்று எண்ணவே தோன்றுகிறது.


Leave a Reply