டெல்லியில் மீண்டும் கெஜ்ரிவால் ராஜ்ஜியம்..? கருத்துக் கணிப்பில் தகவல்!!

டெல்லி சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 8-ந்தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அர்விந்த் கெஜ்ரிவாலே மீண்டும் ஆட்சியைப் பிடிப்பார் என கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

 

நாட்டின் தலைநகர் டெல்லியில் வசிக்கும் மக்கள், எப்போதுமே ஒரே மாதிரி, ஒரே கட்சிக்கு வாக்களிப்பதில்லை என்பது கடந்த 25 ஆண்டு கால புள்ளி விபரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

 

கடந்தமக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு அமோகமாக வெற்றியை வாரி வழங்கும் டெல்லி வாசிகள், சட்டசபைத் தேர்தலில் அக்கட்சியை காலை வாரி விடுவது சகஜமாகி விட்டது.

 

இதனால் கடந்த 1998-ல் மாநில ஆட்சியை இழந்த பாஜக கடந்த 21 வருடங்களாக மீண்டும் அரியணை ஏற முடியவில்லை. 1998 முதல் 2013 வரை தொடர்ந்து 3 முறை காங்கிரஸ் வெற்றி பெற்று அக்கட்சியின் ஷீலா தீட்சித், தொடர்ந்து 15 ஆண்டுகள் முதல்வராக இருந்தார்.

 

பின்னர் 2014-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளையும் மொத்தமாக அள்ளியது. ஆனால் அடுத்த சில மாதங்களில், 2015-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நிலைமை அடியோடு மாறியது.

 

அப்போதுதான், ஆம் ஆத்மி கட்சியை புதிதாக தொடங்கியிருந்த கெஜ்ரிவால், டெல்லியில் கோலோச்சி வந்த காங்கிரசையும், பாஜக வையும் கிளீன் போல்டு செய்தார். மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 இடங்களை கைப்பற்றி அபார சாதனை படைத்தார். பாஜகவுக்கு வெறும் 3 இடங்கள் கிடைக்க, காங்கிரசோ ஜீரோவாகி விட்டது.

 

இப்போதும், 2019 மக்களவைப் பொதுத் தேர்தலில் பாஜக , டெல்லியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்ற நிலையில், அடுத்த மாதம் 8-ந்தேதி, மாநில சட்டப் பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி மோசமான தோல்வியடைந்து அனைத்து இடங்களிலுமே 3-வது இடம் தான் பிடித்தது.

 

அந்த தேர்தலில் சட்டசபை தொகுதிகள் படியான முடிவைப் பார்த்தால் பாஜக 65, காங்கிரஸ் 5 இடங்களில் முன்னிலை பெற, ஆம் ஆத்மி அனைத்து இடங்களிலுமே 3-வது இடத்துக்கு பின் தள்ளப்பட்டது.

 

இந்நிலையில், நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் டெல்லி மக்களின் எண்ண ஓட்டம் வேறு மாதிரியாக இருக்கும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

 

டெல்லியில் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்ததற்கு பரிசாக, கெஜ்ரிவாலை மீண்டும் அரியணையில் அமரச் செய்யவே டெல்லி வாசிகள் விரும்புவதாக கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

 

தேர்தல் தேதி அறிவித்த அடுத்த நிமிடமே, சி-வோட்டர்-ஐஏஎன்எஸ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், கெஜ்ரிவாலுக்கே அமோக ஆதரவு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

 

ஆம் ஆத்மி 59 இடங்கள் வரை கைப்பற்றும் என்றும் பாஜகவுக்கு 8, காங்கிரசுக்கு வெறும் 3 இடங்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கெஜ்ரிவால் மீண்டும் ஆட்சியை தக்க வைப்பார் என்பதே தற்போதைய நிலவரம்.


Leave a Reply