டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 8-ந்தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் கெஜ்ரிவால் அரசின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், பிப் 8-ந்தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து தேர்தல் அட்டவணையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு வரும்14-ல் வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி, 21-ந் தேதி வேட்பு மனுதாக்கல் நிறைவு பெறுகிறது. ஜனவரி 22-ந் தேதி வேட்புமனு பரிசீலனையும், 24-ந் தேதி வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 8-ந் தேதி 70 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக டெல்லி தேர்தல் நடைபெறும் என்றும் பிப்ரவரி 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியை தொடங்கிய குறுகிய காலத்திலேயே அமோக வெற்றி பெற்று அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியமைத்தார். இம்முறை பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வலுவாக மோதுவதால் மும் முனைப் போட்டியில் வென்று ஆட்சியை தக்க வைப்பாரா? என்ற கேள்வியுடன் இத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.