சேலத்தில் ரஜினியின் தர்பார் படம் ரிலீசாகும் தியேட்டர் ஒன்றின் மீது ஹெலிகாப்டரில் பூ மழை தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி வழங்கியுள்ள மாவட்ட நிர்வாகம், உரிய கண்காணிப்பில் ஈடுபடுமாறு சம்பந்தப்பட்ட பகுதி தாசில்தாருக்கு உத்தரவிட்ட கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி, ஆஹா 2020-ல் என்ன நடக்க வேண்டும் என அப்துல் கலாம் கனவு கண்ட திட்டம் நிறைவேறி விட்டது என்று கிண்டலடித்து வருகின்றனர்.
பிரபல நடிகர்களின் படங்கள் ரிலீசின் போது அவர்களின் ரசிகர்கள் பேனர், போஸ்டர், கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்து தடபுடலாக அசத்தி விடுவது வழக்கமான ஒன்று. சமீப காலமாக இந்தக் கலாச்சாரம் ஒரேயடியாக விஸ்வரூபமெடுக்க, தற்போது கட் அவுட், பேனர் வைக்க சட்டம் போட்டு தடை போட்டுவிட்டது அரசு. ஆனாலும் நம்ம ஆட்கள் தான் விதவிதமாக விஞ்ஞான ரீதியிலும் யோசிப்பவர்களாயிற்றே. அதுவும் ரஜினி படம் என்றால் விடுவார்களா சும்மா? தர்பார் பட ரீலீசுக்கு ஒரேயடியாக ஹெலிகாப்டரை வாடகைக்கு பிடித்து தியேட்டரின் மேல் பூ மழை தூவ ஏற்பாடு செய்து விட்டனர்.
சேலம் மேற்கு மாவட்டம் மெய்யனூரில் உள்ள ஒரு தியேட்டரில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ கனகராஜ் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க, அனுமதியும் கிடைத்துள்ளது. அது மட்டுமின்றி, தர்பார் ரிலீஸ் நாளான 9-ந் தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபடுமாறு சேலம் மேற்கு வட்டாட்சியருக்கு மாவட்டம் நிர்வாகம் உத்தரவும் போட்டுள்ளது. இந்த உத்தரவுக் கடிதம் இப்போது சமூக வலைதளங்களில் வைர லாகி வருகிறது.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், 20 ஆண்டுகளுக்கு முன்னர் இளைஞர்களே;இந்தியா முன்னேற கனவு காணுங்கள்.2020-ல் இந்தியா முன்னேற விஷன் 2020 என்ற அருமையான தனது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார். இதை சுட்டிக்காட்டியுள்ள நெட்டிசன்கள், தர்பார் படத்துக்கு ஹெலிகாப்டரில் பூ மழை தூவுவதை ஒப்பிட்டு, ஆஹா கலாம் ஐயா கனவு காணச் சொன்ன விஷன் 2020 இது தான் போலும் என ஆதங்கமாக சாடி எதிர்வினையாற்றி வருகின்றனர்.