பீகார் முதல்வர் நிதீஷ் குமாரை காணவில்லை என்ற வாசகங்களுடன் விதவிதமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தச் சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றன என்று கூறிவிட முடியாது. பாஜக ஆளும் வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்கள் பலரும் வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல் பாஜக கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், தங்கள் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள் கிளம்புவதைக் கண்டு பீதியடைந்துள்ளன.
இது போன்ற நிலை பீகாரில், பாஜகவில் கூட்டணியில் உள்ள அம்மாநில முதல்வரும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவருமான நிதீஷ் குமாருக்கும் கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியுள்ளன. மசோதாவை ஆதரித்ததை எதிர்த்து அக் கட்சியின் துணைத் தலைவர் பிரசாந்த் கிஷோர் என்பவர் ராஜினாமா செய்துள்ளார். கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் முதல்வர் நிதீஷ் குமார் மவுனம் சாதித்து வருகிறார்.
இதனால், இன்று அதிகாலை பீகார் தலைநகர் பாட்னா நகர் முழுவதும், நிதீஷ் குமாரை காணவில்லை என்ற வாசகங்களுடன் விதவிதமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததைக் கண்டு பலரும் ஆச்சர்யமடைந்தனர். முதல்வர் நிதீஷ் குமாரை கிண்டலடிக்கும் விதமாக ஒட்டப்பட்டுள்ள இந்தப் போஸ்டர்கள் நிதீஷ் குமாருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.