உள்ளாட்சித் தேர்தல் நாளுக்கு முன்னதாகவே, குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கிட தமிழக அரசு தீவிரமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள சுமார் 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் கடந்த பொங்கலுக்கு ரூ.1000 ரொக்கம், தலா 1 கிலோ அரிசி மற்றும் சக்கரை, கரும்பு, முந்திரிப்பருப்பு, உலர் திராட்சை, ஏலக்காய் கொண்ட பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.வரும் பொங்கலுக்கும் இதே போன்று வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டார்.
உள்ளாட்சித் தேர்தலை மனதில் கொண்டு, பொங்கலுக்கு 2 மாதத்திற்கு முன்பே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் முன்பே இத்திட்டத்தையும் முதல்வர் எடப்பாடி தொடங்கியும் வைத்து விட்டார்.
இதனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும், ஏற்கனவே தொடங்கி வைக்கப்பட்ட திட்டம் என்பதால், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கலாம் என மாநில தேர்தல் ஆணையமும் பச்சைக் கொடி காட்டி விட்டது. இதனால் உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில், தேர்தலுக்கு முன், இந்த பரிசுத் தொகுப்பை வழங்கி விட தமிழக அரசு, கூட்டுறவு சங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் படு தீவிரமாக நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே ஊரகப் பகுதிகளில் நடைபெறும் தேர்தலில் நிற்போர் பலர் வாக்காளர்களை கவர தனி ‘கவனிப்பு’ நடத்த தொடங்கி விட்ட நிலையில், தமிழக அரசின் ரூ .1000 ரொக்கமும் அடுத்த சில நாட்களில் கிடைக்க உள்ளதால் ஏக குஷியடைந்துள்ளனர்.