குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு – தமிழகம் முழுவதும் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்!!

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.போராட்டங்களும் தீவிரமடைந்துள்ளன. கேரள முதல்வர் பினாரயி விஜயன், மே.வங்க முதல்வர் மம்தா ஆகியோரும் இந்தச் சட்டத்திற்கு எதிராக வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

 

இந்த சட்டத் திருத்தத்திற்கு திமுகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த து. அதன்படி இன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட திமுகவினர் ஏராளமானோர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

 

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், இந்தச் சட்டத்தை ஆதரிக்கும் அதிமுகவுக்கும் எதிராகவும் திமுகவினர் முழக்கங்களை எழுப்பினர். சென்னை மண்ணடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி., சேப்பாக்கத்தில் தயாநிதி மாறன் எம்.பி., ஆதம்பாக்கத்தில் தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி.யும் பங்கேற்றனர்.


Leave a Reply