டெல்லி வன்முறை சம்பவம்..! மாணவர் போராட்டத்தில் ஊடுருவி கலகம் செய்ததாக 10 ரவுடிகள் கைது!!

டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தின் போது நடந்த திடீர் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 10 ரவுடிகளை கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மாணவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என டெல்லி போலீஸ் அறிவித்துள்ளது.

 

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். கடந்த 15-ந் தேதி மாலை, தெற்கு டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர்.

 

அப்போது, வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த போலீசார், மாணவர்கள் மீது சரமாரியாக தடியடி நடத்தி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. மாணவர்களும் பதிலுக்கு கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பல்கலைக்கழக வளாகம் போர்க்களமானது. போலீசாரின் அத்துமீறலைக் கண்டித்து, பல்கலைக்கழகத்துக்கு வெளியில் வந்த மாணவர்கள், சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.அப்போது திடீரென வன்முறை வெடித்து, வாகனங்கள் பல தீ வைத்து கொளுத்தப்பட்டன.

 

டெல்லியில் நடந்த இந்தத் திடீர் வன்முறை சம்பவத்திற்கு, டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியே காரணம் என்றும், அக்கட்சி எம்எல்ஏ ஒருவரே முன்னின்று ஆட்களை ஏவிவிட்டு வன்முறையை கட்டவிழ்த்து விட்டதாக பாஜக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதை மறுத்த ஆம் ஆத்மி மூத்த தலைவரும், துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா, போலீசார் தான் வன்முறைக்கு காரணம் என்று கூறி, வாகனங்களுக்கு போலீசார் தீ வைப்பது போன்ற காட்சிகளுடனான புகைப்படங்களையும் வெளியிட்டார்.

 

டெல்லி வன்முறை, மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு நாடு முழுவதும் பெரும் கண்டனங்கள் எழுந்த நிலையில், பல்வேறு நகரங்களில் நேற்று மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் டெல்லி இந்தியா கேட் முன் சாலையில் அமர்ந்து 2 மணி நேரம் தர்ணா போராட்டம் நடத்தினார்.

 

இந்நிலையில், டெல்லி வன்முறைச் சம்பவம் தொடர்பாக 10 ரவுடிகளை கைது செய்துள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் மாணவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், கைதான அனைவரும் குற்றப் பின்னணி கொண்ட ரவுடிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தின்போது ஊடுருவி, வன்முறையில் ஈடுபட்டது, சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்ததைத் தொடர்ந்து 10 பேரும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர் என டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.


Leave a Reply