கடலூர் மாவட்டத்தில் நடுக்குப்பம் ஊராட்சியில், பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர் பதவிகளை ஏலம் விட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ளது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் 27, 30 தேதிகளில், ஊரகப் பகுதி உள்ளாட்சிகளுக்கு இரு கட்டங்களாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட நடுக்குப்பம் ஊராட்சியில் பதவிகளை ஏலம் விட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ளது. ஊர் பொதுவில் கூட்டம் நடத்தி, ஏலம் விட்டதில் முன்னாள் பஞ்சாயத்து தலைவரும், அதிமுக பிரமுகருமான சக்திவேல் என்பவர் ரூ. 50 லட்சத்திற்கு பஞ்சாயத்து தலைவர் பதவியை ஏலத்தில் எடுத்துள்ளார். துணைத் தலைவர் பதவியை தேமுதிக பிரமுகர் முருகன் என்பவர் ரூ.15 லட்சத்திற்கு எடுத்துள்ளார். ஏலம் விட்ட இந்தப் பணத்தை ஊர் பொதுக் கோவிலான திரவுபதி கோவில் கட்டுமானத்திற்கு செலவிட ஊர் பொது மக்கள் முடிவு செய்துள்ளனராம்.
நடுக்குப்பம் ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவியை ஏலம் விட்டது தொடர்பான செய்திகளும், புகைப்பLங்களும், வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைர லாகி, தமிழகம் முழுவதும் பரபரப்பு கிளம்பியது. ஜனநாயக ரீதியில் நடத்தப்பட தேர்தலை , கேலிக்கூத்தாக்கும் வகையில் இப்படி ஏலம் விட்டு பதவிகளை குத்தகைக்கு விட்டு கேவலப்படுத்துவதா? என்று கண்டனங்களும் குவிந்தன.
இந்நிலையில், இந்த ஏலம் விட்ட விவகாரம் உண்மையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச் செழியன் உறுதியளித்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், நடுக்குப்பம் ஊராட்சியில், பதவிகளை ஏலம் விட்ட தகவல் கிடைத்துள்ளது.இது தொடர்பாக உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு தேர்தல் நடத்தாமல் ஏலம் விடுவது பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் மட்டுமின்றி, இந்திய தண்டனைச் சட்டத்திலும் பெரும் கிரிமினல் குற்றமாகும். இதற்கு கூடுதல் தண்டனையும் உண்டு. எனவே ஏலம் விடப்பட்டது உண்மை என்று தெரிய வந்தால் கடும் நடவடிக்கைகள் எடுப்பது உறுதி என்று ஆட்சியர் அன்புச் செழியன் தெரிவித்துள்ளார். இதனால் நடுக்குப்பம் கிராமத்தில் அதிகாரிகள் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இப்படி ஏலம் விட்ட விவகாரம் விபரீதமான நிலையில், தலைவர் பதவியை ஏலம் எடுத்ததாகக் கூறப்படும் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சக்திவேல் அப்படி ஏலமே நடக்கவில்லை என்று மறுத்துள்ளார்.தமக்கு வேண்டாதவர்கள், திட்டமிட்டு கிளப்பி விட்ட வதந்தி என்றும் தெரிவித்துள்ளார்.