உள்ளாட்சித் தேர்தலில், திருவாடானை யூனியன் தலைவர் பதவிக்கு அதிமுகவில் எனக்கு, உனக்கு என பெரும் மல்லுக்கட்டு நடக்கிறது. சேர்மன் பதவியை குறிவைத்து இராமநாதபுரம் முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆணிமுத்து தனக்கும், தனது அண்ணன் மனைவி முனியம்மாள் ராஜேந்திரனுக்கு ஒன்றிய கவுன்சிலர் வார்டுகளை ஒதுக்கக் கோரி அடம் பிடிப்பதால், எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் வரப்போகிறது என்று அறிவிப்பு வெளியானது தான் தாமதம், ஆளும் அதிமுகவில் மட்டுமின்றி, திமுக உள்ளிட்டர் முக்கியக் கட்சிகளைச் சேர்ந்த ஏகப்பட்ட பேர் ஒன்றிய கவுன்சிலர் முதல் மாநகராட்சி மேயர் பதவி வரை கனவு காண ஆரம்பித்து விட்டனர். அதற்கேற்றாற்போல் கட்சிகளும் விருப்ப மனு வாங்கும் வைபவத்தையும் நடத்தியதால், பலரும் போட்டி போட்டு மனுச் செய்ய ஆரம்பித்தனர்.

இடையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர்ப்புற ஊராட்சிகளுக்கு இப்போது தேர்தல் இல்லை என்ற அறிவிப்பு வந்ததால், பெரும்பாலானோர் சுணங்கிப் போய் விட்டனர். இப்போது, ஊரகப் பகுதிகளில் பஞ்சாயத்து தலைவர், உறுப்பினர் மற்றும் மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற உள்ளது.
இதிலும் பஞ்சாயத்து தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கட்சி சார்பற்ற முறையில் தேர்தல் நடைபெறுகிறது.ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு மட்டுமே கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் மாவட்ட ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளதால், கவுன்சிலராக வெற்றி பெற்றவர்கள் மட்டுமே, தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தலில் போட்டியிட முடியும்.
இதிலும் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியைக் காட்டிலும், ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்குத் தான் மவுசு அதிகம். இதனால் ஒன்றியத் தலைவர் பதவிக்கு குறி வைத்துள்ள அதிமுக புள்ளிகள், இப்போதே தங்களுக்கான கவுன்சிலர் வார்டுகளை தேர்வு செய்து, அந்த வார்டுகளை கட்சி மேலிட செல்வாக்கு மூலம் பெற்று விட காய் நகர்த்தி வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் பல ஊர்களில் அதிமுகவினரிடையே போட்டா போட்டி நிலவுகிறது.

இதில் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை யூனியன் சோ்மன் பதவிக்கு, இப்போதே ஏகப்பட்ட முட்டல் மோதலாகிக் கிடக்கிறது. இந்த யூனியனில் இதற்கு முன் தலைவராக இருந்த முனியம்மாள் ராஜேந்திரன், இம்முறையும் இந்தப் பதவியை குறிவைத்து தனது சொந்த ஊரான அஞ்சுக்கோட்டை பகுதிக்குட்பட்ட ஒன்றிய கவுன்சிலர் வார்டில் நிற்க விருப்ப மனு கொடுத்துள்ளார். இராமநாதபுரம் மாவட்ட முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளரான ஆணிமுத்துவின் உடன் பிறந்த அண்ணன் ராஜேந்திரனின் மனைவி தான் இந்த முனியம்மாள் ராஜேந்திரன்.
அண்ணன் மனைவிக்கு தலைவர் பதவி கிடைக்காவிட்டால், தான் வாங்கி விட வேண்டும் என்ற முனைப்பில் ஆணிமுத்துவும் தனக்கு ஒரு வார்டு ஒதுக்க வேண்டும் என குஞ்சன்குளம் , ஓரிக் கோட்டை மற்றும் சிறுமலைக்கோட்டை ஊராட்சிகள் உள்ளடங்கிய வார்டை கேட்டுள்ளார்.
ஆனால் இந்த வார்டில் ஏற்கனவே கவுன்சிலராக இருந்த பழனிச்சாமி என்பவரும் தனக்குத்தான் ஒதுக்க வேண்டும் என ஒற்றைக் காலில் நிற்கிறாராம். ஆனால் முன்னாள் மா.செ. என்ற கோதாவில், பழனிச்சாமிக்கு நெருக்கடி கொடுக்கிறாராம் ஆணிமுத்து. எப்படியாவது ஒன்றியத் தலைவர் பதவியை தங்கள் குடும்பத்தில் ஒருவர் பெற்று விட வேண்டும் என்பதே ஆணிமுத்துவின் பிளான்.

ஆனால் திருவாடானை ஒன்றிய அதிமுக செயலாளரான மதிவாணனும் இந்த முறை யூனியன் சேர்மனாகி விட வேண்டும் என மும்முரமாக உள்ளார். இவா் இருக்கும் பகுதிக்குட்பட்ட வார்டில் நிற்க விருப்ப மனுவும் செய்துள்ளார். முன்னாள் மா.செ. ஆணிமுத்து குடும்பத்தில் 2 பேர் கவுன்சிலராகி விட்டால், அதைக் காட்டியே சேர்மன் பதவிக்கும் மல்லுக்கட்டுவார் என்பதால், ஆணிமுத்துக்கு, வார்டு ஒதுக்கக்கூடாது என்பதில் பிடிவாதமாக உள்ளாராம்.
இதனால், ஜாதி ரீதியிலான ஓட்டு வங்கியை காரணம் காட்டி, ஏற்கனவே கவுன்சிலராக இருந்த பழனிச்சாமிக்கு சப்போர்ட் செய்கிறார். இங்கு பழனிசாமி சார்ந்த உடையார் சமூகத்து வாக்குகள் தான் அதிகம். முன்னாள் மா.செ. ஆனிமுத்து சார்ந்த தேவர் சமுதாய வாக்குகள் ரொம்ப கம்மி என்பதைக் கூறி, ஆனிமுத்துவை ஓரம் கட்டப் பார்க்கிறாராம் திருவாடானை ஒன்றிய செயலாளா் மதிவாணன் .
இதனால் முன்னாள் மா.செ. ஆணிமுத்து தரப்புக்கும், திருவாடானை ஒன்றிய செயலாளர் மதிவாணத்துக்கும் இடையே சில நாட்களாக முட்டல் மோதலாக உள்ளது. வார்டு ஒதுக்கீடு தொடர்பாக மாவட்ட கட்சி அலுவலகத்தில் பஞ்சாயத்தும் நடந்துள்ளது. அப்போது மாவட்டச் செயலாளர் முனியசாமி முன்னிலையிலேயே இரு தரப்பும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட ஒரே களேபரமாகிவிட்டதாம்.
இதனால் மாவட்டச் செயலாளர் முனியசாமியும் சமாதானம் செய்ய முடியாமல் தவிக்க, திருவாடானை யூனியன் தலைவர் போட்டியில் இப்போதே பெரும் மல்லுக்கட்டாக உள்ளது.