கர்நாடகாவில் இடைத்தேர்தலில் ஜெயித்த பாஜக எம்எல்ஏக்கள் அனைவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். இவர்கள் அனைவருமே காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளில் இருந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவுக்கு தாவியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு, கடந்த ஜுலை மாதம் கவிழ்ந்தது. இதற்கு காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளின் 17 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததே காரணம். இவர்களை ராஜினாமா செய்யத் தூண்டியது பாஜக தான் என்றும் கூறப்பட்டது. இவர்கள் அனைவருக்கும், பாஜக அரசு அமைந்தால் மீண்டும் எம்எல்ஏவாக்கி அமைச்சர் பதவி வழங்குவதாகவும் உத்தரவாதம் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் இவர்களின் ராஜினாமாவால் தான் எடியூரப்பா தலைமையில் பாஜக அரசு பதவிக்கு வர முடிந்தது.
தொடர்ந்து,எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த 17 பேரும் பாஜகவில் இணைந்த நிலையில், கடந்த 6-ந் தேதி அங்கு 15 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது.இதில் கட்சி தாவி வந்து பாஜகவில் இணைந்த 17 எம்எல்ஏக்களில் 14 பேருக்கு மீண்டும் தங்கள் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. தேர்தல் முடிவில் 14 பேரில் 12 பேர் ஜெயித்தனர்.
பாஜக ஆட்சிக்கு வரக் காரணமாக இருந்த இவர்கள் 12 பேருக்கும், ஏற்கனவே உறுதி அளித்தபடி அமைச்சர் பதவி வழங்கப்படும் என முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். அதிகாரம், பதவிக்காக அரசியலில் எதுவும் நடக்கும் என்பதற்கு கர்நாடக அரசியல்வாதிகள் சிறந்த முன்னுதாரணம் என்பதற்கு சமீபத்திய இந்த நிகழ்வு ஒரு எடுத்துக் காட்டு என்றே கூறலாம்.