மகாராஷ்டிராவில் பாஜக அரசு அமைக்கப்பட்டதை எதிர்த்தும், உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரியும் சிவசேனா கூட்டணி தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் இன்றும் காரசார வாதம் நடைபெற்றது. ஆளும் தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து இந்த வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறி விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது. இதனால் மகாராஷ்டிர அரசியலில் குழப்பம் தொடர்கிறது .
மகாராஷ்டிராவில் பாஜகவின் பட்னாவிஸ், அவசர அவசரமாக முதல்வர் பதவியேற்றதை எதிர்த்து சிவசேனா – என்.சி.பி.-காங்கிரஸ் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட இந்த வழக்கை, விடுமுறை நாளான நேற்று உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்றது.
உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.சிவசேனா கூட்டணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள். கபில் சிபல், அபிசேக் மனு சிங்வி ஆகியோர், பட்னாவிசை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தது தவறு என வாதிட்டனர். மேலும் 24 மணி நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரியும் வாதிட்டனர். இதற்கு அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் முகுல்ரோத்கி, ஆளுநரின் முடிவில் தலையிட முடியாது என வாதிட்டதுடன், உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்க அவகாசம் கேட்டார்.
இதனால், பட்னா விசை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்த கடிதம், அஜித் பவார் தரப்பில் கொடுக்கப்பட்ட ஆதரவுக் கடிதம் உள்ளிட்டவற்றை தாக்கல் செய்ய உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை இன்று காலை 10.30 மணிக்கு ஒத்தி வைத்தது.
அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை தொடர்ந்தது. அப்போது, சிவசேனா கூட்டணி தரப்பில், 22-ந் தேதி மாலையே சிவசேனா தலைமையில் ஆட்சி அமைக்க முடிவு செய்து விட்டதாக அறிவித்தோம். ஆனால் அவசரமாக மறு நாள் அதிகாலை குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து, பட்னா விசை முதல்வராக்கியது ஏன்? 24 மணி நேரம் ஆளுநர் பொறுத்திருந்திக்கலாமே? அஜித் பவாரைத் தவிர தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் யாரும் பாஜகவுக்கு ஆதரவு தரவில்லை.
அஜித் பவாரை சட்ட மன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுக்க எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்ததை வைத்து, பாஜகவுக்கு ஆதரவு கொடுத்தது போல் மோசடி செய்து விட்டார். அந்தக் கடிதத்தை அரைகுறையாக நம்பி பாஜக ஆட்சியமைத்துள்ளது.இது மிகப் பெரிய ஜனநாயக மோசடி . தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாக கூறும் பாஜக, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயங்குவதேன்? என்று வாதிட்டனர்.
மேலும் சிவசேனா கூட்டணிக்கு 154 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்ய அபிசேக் சிங்வி முன் வந்தார். ஆனால் இதனை ஏற்க நீதிபதிகள் மறுத்ததால் வாபஸ் பெற்றார். தொடர்ந்து அரசுத் தரப்பில் வாதிட்ட முகுல்ரோத்கி, மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் முதலில் இடைக்கால சபாநாயகரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பின் எம்எல்ஏக்கள் பதவியேற்க வேண்டும். தொடர்ந்து சபாநாயகர் தேர்வு செய்யப்பட வேண்டும். இதெல்லாம் நடந்த பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியும். எனவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அவசரம் காட்டாமல், உரிய அவகாசம் தேவை என வாதிட்டார்.
ஆனால் சிவசேனா தரப்போ, இன்றோ, நாளையோ நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்பதில் பிடிவாதம் காட்டியது. இதனால் இரு தரப்பிலும் காரசார வாக்குவாதம் நீடித்தது.
இதையடுத்து இந்த வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் எனவும், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதிகள் அறிவித்தனர் அறிவித்தனர். இதனால் பட்னாவிஸ் அரசுக்கு மேலும் ஒரு நாள் நிம்மதி கிடைத்துள்ளது என்றே கூறலாம்.