கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவு; பேராசிரியை நிர்மலாதேவிக்கு 15 நாள் காவல் !!

கோர்ட்டில் ஆஜராகாமல் தறை மறைவாக இருந்த அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை போலீசில் பிடிபட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி.தம்மிடம் படித்த கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் விஐபிக்கள் பலரின் பெயரும் அடிபட்டதால், தமிழகத்தையே பரபரப்புக்கு ஆளாக்கிய து இதில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு உடந்தையாக இருந்த மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.

 

இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், முருகன், கருப்பசாமி ஆகியோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஆனால் நிர்மலாதேவிக்கு பலமுறை ஜாமீன் மறுக்கப்பட்டது.தமக்கு ஜாமீன் கொடுக்க மறுப்பதற்கு காரணம் சில முக்கிய அரசியல்வாதிகள் தான். இந்த வழக்கில் அவர்களுக்கும் சம்பந்தம் உள்ளது.வெளியே வந்தால் உண்மையை கூறி விடுவேன் என்பதால் எனக்கு ஜாமீன் கிடைக்க விடாமல் சதி செய்கின்றனர் என நீதிமன்ற வளாகத்தில் நிர்மலாதேவி பரபரப்பு குற்றச்சாட்டு கூறியதும் பெரும் சர்ச்சையானது.

 

இதனால், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் முறையீடு செய்ததைத் தொடர்ந்து, ஓராண்டுக்குப் பிறகு சிறையிலிருந்து வெளி வந்தார். வெளியில் வந்த பிறகு நிர்மலாதேவியின் நடவடிக்கைகளில் திடீர்,திடீரென மாற்றங்கள் ஏற்பட்டது. வழக்கு விசாரணைக்கு வரும் போது நீதிமன்ற வளாகத்தில் பைத்தியம் போல் உளறுவது, சாமி வந்தது போல் தலையை விரித்து ஆடுவது, திடீரென மொட்டை அடித்துக் கொள்வது, வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி விளாசுவது என மனநிலை பாதிக்கப்பட்டது போன்று அவருடைய நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த 18-ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது நிர்மலாதேவி ஆஜராகவில்லை. அவர் தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்பட்ட நிலையில், அவரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறக்கப்பட்டது. இதனால் தலைமறைவாக இருந்த நிர்மலாதேவியை போலீசார் தேடி வந்தனர்.

 

இந்நிலையில், ஒரு வார இடைவெளிக்குப் பின், விருதுநகரில் உள்ள வீட்டிற்கு நிர்மலாதேவி திரும்பி வந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கவே, இன்று அவரை கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.’இதைத் தொடர்ந்து நிர்மலாதேவியை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட, மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.

 

இதற்கிடையே நிர்மலாதேவி தலைமறைவாகவில்லை. அவரை யாரோ கடத்திச் சென்று அடைத்து வைத்திருக்கலாம். இதில் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பிருக்கலாம் என பேராசிரியை நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதனால் நிர்மலாதேவி விவகாரத்தில் இன்னும் பல மர்மங்கள் உள்ளதாகவே சர்ச்சை எழுந்து பரபரப்பாகியுள்ளது.


Leave a Reply