அன்று ஊழல்வாதி… இன்று மிஸ்டர் பரிசுத்தம்…! பாஜக பக்கம் தாவிய 2 நாளில் அஜித்பவார் மீதான ஊழல் வழக்கு வாபஸ்!!

மகாராஷ்டிராவில், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு ஆதரவாக அணி மாறி, துணை முதல்வர் பதவியேற்ற அஜித் பவாருக்கு, இரண்டே நாளில் கைமேல் பலன் கிடைத்துள்ளது. கடந்த பாஜக ஆட்சியில் அவர் மீது போடப்பட்ட ரூ.70 ஆயிரம் கோடி ஊழல் வழக்கை கைவிடுவதாக அம்மாநில ஊழல் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.

 

அஜித் பவார்…. இவருடைய பெயர் தான் கடந்த 3 நாட்களாக இந்திய ஊடகங்களில் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர்.மகாராஷ்டிராவின் முதுபெரும் அரசியல் தலைவரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான சரத் பவாரின் அண்ணன் மகன். அது மட்டுமின்றி சரத் பவாருக்கு அடுத்து அந்தக் கட்சியில் ஆல் இன் ஆல் தலைவர் இவர்தான்.கடந்த 1999 முதல் 2014 வரை மகாராஷ்டிராவில் காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்தவர். தற்போது நடந்து முடிந்த தேர்தலிலும் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குழுவின் தலைவராகவும் அஜித் பவார் தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்தால் அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி என்றும் பேசி முடிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தான் மகாராஷ்டிரா அரசியலில் யாருமே எதிர்பாராத மகா திருப்பம் நேற்று முன்தினம் காலை அரங்கேறியது. அஜித் பவாரை ஒரே இரவில் சரிக்கட்டிய பாஜக, நேற்று முன் தினம் ( 23-ந் தேதி), தேசியவாத காங்கிரசின் ஆதரவுடன் ஆட்சியமைப்பதாகக் கூறி, ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா மிக ரகசியமாக நடந்தேறியது. பாஜகவின் பட்னாவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். காலை நேரத்தில் நடந்தேறிய இந்த பதவியேற்புவை போகத்தை முதலில் யாருமே நம்பவில்லை.

 

பாஜகவுக்கு தேசியவாத காங்கிரஸ் எப்போது ஆதரவளித்தது.நள்ளிரவு வரை சிவசேனா தலைமையில் ஆட்சி என்று தானே சரத் பவார் கூறி வந்தார்.சரத் பவார் நயவஞ்சமாக நாடகமாடி விட்டார் என்றெல்லாம் விமர்சனங்கள் அவர் மீது எழுந்தன. ஆனால், தேசியவாத காங்கிரஸ் அப்படி எதுவும் முடிவெடுக்கவில்லை. அஜித் பவார் என்ற தனிநபர் எடுத்த முடிவு . பாஜகவை தேசியவாத காங்கிரஸ் ஒருபோதும் ஆதரிக்காது என சரத் பவார் கொடுத்த விளக்கத்திற்கு பிறகு தான் உண்மை நிலவரம் வெளியுலகுக்கு தெரிய வந்தது.

அஜித் பவார் பாஜக பக்கம் சாய்ந்தது ஏன்? என்பதற்கும் அவர் மீதான ஊழல் புகாரே காரணம் என்றும் கூறப்பட்டது. 1999-2014 காலகட்டத்தில் அமைச்சராக இருந்த அஜித் பவார் மீது ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தது. அதிலும் விதர்பா நீர்ப்பாசனத் திட்டத்தில் ரூ 70 ஆயிரம் கோடி ஊழல் செய்ததாகவும் ஒரு புகார் .2014-ல் பாஜக ஆட்சி அமைந்தவுடனே, முதல்வரான பட்னாவிஸ், அஜித் பவார் மீதான ஊழல் புகாரை விசாரிக்க உத்தரவிட்டார். இதனால் விதர்பா நீர்ப்பாசனத் திட்டத்தில் ரூ. 70 ஆயிரம் கோடி ஊழல் செய்ததாக அவர் மீது வழக்குப் பாய்ந்து, மகாராஷ்டிர மாநில ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ் வசம் இந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தது. தற்போது இந்த வழக்கை காரணம் காட்டி, தங்கள் பக்கம் வந்தால் வழக்கு வாபஸ் ; இல்லையேல் மத்திய அரசு மூலம் நடவடிக்கைகள் பாயும் என மிரட்டப்பட்டே வளைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

 

இந்நிலையில் அஜித் பவார் பாஜக பக்கம் சாய்ந்து, துணை முதல்வர் பதவியேற்ற, இரண்டே நாளில், அவர் மீதான 70 ஆயிரம் கோடி ௹பாய் ஊழல் வழக்கை கைவிடுவதாக அம்மாநில ஊழல் தடுப்பு போலீஸ் அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. ஆகா, பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது என்ற கதையாக, அஜித் பவார் பாஜக பக்கம் சாய்ந்தது இதற்காகத்தான் என்று இப்போது விமர்சனங்கள் எழுந்து மகாராஷ்டிரா அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply