பள்ளி மாணவியை 3 நாட்களாக வைத்து பாலியல் தொல்லை!
பத்தாம் வகுப்பு பள்ளி மாணவிகள் இருவரை கடத்தி சென்று 3 நாட்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஆட்டோ ஓட்டுநர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை கண்ணகி நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இருவர் பள்ளி சென்றுவிட்டு வீடு திரும்பாததால் பெற்றோர் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில் கண்ணகி நகர் காவல் ஆய்வாளர் வீரக்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக மாணவிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் மாயமான மாணவிகள் இருவரும் அவரது வீட்டின் அருகிலேயே ஒரு ஆட்டோவில் ஏறி செல்லும் காட்சி அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை கைப்பற்றிய போலீசார் ஆட்டோவின் பதிவு எண்ணைக் கொண்டு விசாரணையை துவக்கினர். அந்த விசாரணையில் மாணவிகள் ஏறிச் சென்ற ஆட்டோ சென்னை காரப்பாக்கம் பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
பின்னர் ஆட்டோ ஓட்டுநரின் செல்போன் எண்ணை கொண்டு அதன் சிக்னலை ஆய்வு செய்த தனிப்படை போலீசார் திருப்பூர், கும்பகோணம் நெடுஞ்சாலையில் கனகராஜ் பயணித்துக் கொண்டு இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து கும்பகோணம் விரைந்த தனிப்படை போலீசார் அங்கு உள்ள தனியார் விடுதி ஒன்றில் ஆட்டோ ஓட்டுநர் கனகராஜ் மற்றும் அவரது நண்பர் விஜயகுமார் ஆகியோர் உடன் மாயமான 2 பள்ளி மாணவிகளையும் தனிப்படை போலீசார் பிடித்தனர்.பின்னர் நான்கு பேரையும் கண்ணகி நகர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பள்ளி மாணவிகள் நடந்து முடிந்த தேர்வில் தோல்வியடைந்ததால் மூன்று நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் சென்னை கிழக்கு கடற்கரைக்கு சென்றனர். அங்கு மாணவிகளிடம் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட ஆட்டோ ஓட்டுநர் கனகராஜன் பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த அவரது நண்பரான விஜயகுமார் அவர்களை காதலிப்பதாக தெரிவித்துள்ளனர்.
காதலை தெரிவித்த 5 நாட்களிலேயே இருவரையும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று கடந்த 3 நாட்களாக கும்பகோணம் திருப்பூர் போன்ற பகுதிகளில் மாணவிகளுடன் சுற்றித் திரிந்துள்ளனர்.
மேலும் தங்கும் விடுதிகளில் தங்கி இருந்தபோது பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளனர். மாணவிகள் இருவரையும் மீட்டு போலீசார் ஆட்டோ ஓட்டுநர்களான கனகராஜ் விஜயகுமார் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




