பிரபல ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத். இவர் தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்திருந்தார். இப்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான தலைவியில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா ரசிகர்கள் பலரும் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் ஜெயலலிதா போன்று இல்லை என விமர்சித்து வருகின்றனர். இதுபோன்ற விமர்சனங்களில் சிக்குவது கங்கனாவிற்கு ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் இவர் நடித்த ஜான்சி ராணியின் வரலாற்று திரைப்படம் வெளியாகி பல விமர்சனங்களை பெற்றது.
அதேசமயம் இதுபோன்ற வரலாற்று திரைப்படங்கள் இந்திய சினிமாவில் வசூலை குவிக்கும் ஒரு வித்தை ஆகவும் இருக்கிறது. இதனால் ஜெயலலிதாவின் வாழ்க்கை திரைப்படத்தை தொடர்ந்தும் கங்கனா சில வரலாற்று திரைப்படங்களில் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. அதை உறுதி செய்யும் வகையில் தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சமீபத்தில் கங்கனா அளித்த பேட்டியில் சொந்தமாக படம் தயாரிக்க இருப்பதாக தெரிவித்திருந்தார். இப்போது அந்த படம் பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது. அயோத்தி பிரச்சனையை மையப்படுத்தி அபராஜிதா அயோத்தியா என்ற படத்தை தயாரிக்கிறார்.
இதன் கதையை இயக்குனர் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதுகிறார். இதுபற்றி கங்கனா கூறும்போது கடந்த 100 வருடங்களாக எரியும் பிரச்சினையாக இருந்துவந்த அயோத்தி விவகாரம் சமீபத்தில் வெளியான தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்திருக்கிறது.
அபராஜிதா அயோத்தியா படத்தில் ஆன்மீக நம்பிக்கை இல்லாதவனாக இருக்கும் நாயகன் நம்பிக்கை கொண்டவனாக எப்படி மாறுகிறான் என்பதை சொல்கிறோம். எனது சொந்த வாழ்வையும் இந்த கதை பிரதிபலிப்பதால் எனது முதல் தயாரிப்பாக இந்த படத்தை தேர்வு செய்தேன் என்றார் கங்கனா.
அவர் மேலும் கூறும்போது அயோத்தி விவகாரத்தில் நமது ஒற்றுமை மதச்சார்பின்மை உணர்வை சீர்குலைக்க வாய்ப்பிருந்தும், நாம் தேசபக்தர்களாக இருந்தோம். நாட்டின் மீது விசுவாசம் கொண்டவர்களாக இருந்தோம். அதனால் தான் அபராஜிதா என்ற வார்த்தையை அயோத்தி என்ற டைட்டிலுடன் சேர்த்தோம். அதற்கு வெல்லப்பட முடியாதவன் என்று அர்த்தம் தெரிவித்தார் கங்கனா.