இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 22 சதவீதம் அளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் மிகவும் ஆழத்திற்கு சென்று ஆபத்தான நிலையில் இருப்பதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. அதிக அளவாக தமிழ்நாட்டில்தான் நிலத்தடி நீர்மட்டம் அதிக ஆழத்திற்கு சென்றுள்ளது என்று தெரியவந்திருக்கிறது.
நிலத்தடி நீர் மட்டம் குறித்து ஆய்வு செய்யும் மத்திய வாரியம் இது தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுமார் 22 சதவீதம் அளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் வரண்டு விட்டது அல்லது மிகவும் கீழே இறங்கி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழ்நாட்டில் 541 பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் ஆபத்தான முறையில் அதிக ஆழத்திற்கு சென்றுவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்தபடியாக ராஜஸ்தானில் 218 பகுதிகளிலும், உத்திரபிரதேசத்தில் 139 பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் ஆழத்திற்கு சென்று விட்டதாக கூறப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் ஒட்டுமொத்தமாக வேளாண்துறையில் 10% அளவிற்கு தண்ணீரை சேமிப்பதன் மூலம் நாட்டில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு நீர் பற்றாக்குறையை குறைக்க முடியும் என மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.