திருப்பூர் அருகே வீட்டில் இருந்த மிக்ஸியை எடுத்து விற்று மது அருந்திய கணவனை கட்டையால் தாக்கி கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் மங்களத்தை சேர்ந்த வெங்கடேசன் மற்றும் அவரது மனைவி உமாதேவி இருவரும் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் வெங்கடேசன் காயமடைந்தார்.
இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் அவர் மதுப்பழக்கத்திற்கு ஆளாகி உள்ளார். வீட்டில் போதிய வருமானம் இல்லாத நிலையில் வெங்கடேசன் வீட்டில் உள்ள பொருட்களை ஒவ்வொன்றாக விற்று மது குடித்து வந்துள்ளார்.
இதனிடையே கடந்த 17ஆம் தேதி வெங்கடேஷ் வீட்டில் இருந்த மிக்ஸியை எடுத்து விற்று அந்த பணத்தில் மது அருந்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி உமாதேவி கட்டையால் தாக்கியதில் வெங்கடேசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து வெங்கடேசனின் மனைவி உமா தேவியை போலீசார் கைது செய்தனர். ஆரம்பத்தில் வெங்கடேசன் இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்து காயம் ஏற்பட்டதாக உமாதேவி கூறிவந்த நிலையில், பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் தனது கணவனை கட்டையால் அடித்ததை ஒப்புக்கொண்டார்.