பிரசவத்தின் போது வயிற்றுக்குள் ஊசியை வைத்து தைத்த 2 செவிலியர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்தின் போது உடைந்த ஊசியை இளம் பெண்ணின் வயிற்றிற்குள் வைத்து தைத்த செவிலியர் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ரம்யா என்பவர் கடந்த 17ஆம் தேதி பிரசவத்திற்காக உச்சிப்புளி ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

 

அங்கு 19ஆம் தேதி ரம்யாவிற்கு செவிலியர் சத்தியபாமா, அன்பு ஆகியோர் பிரசவம் பார்த்துள்ளனர். பிரசவத்திற்கு பிறகு கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டார். அதனால் ரம்யா ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே எக்ஸ்ரே எடுத்தபோது அவருடைய வயிற்றில் உடைந்த ஊசி இருப்பது தெரியவந்தது.

 

பிரசவம் பார்த்த செவிலியர் கவனக்குறைவால் வயிற்றுக்குள் ஊசியை வைத்து தையல் போட்டு விட்டதாக கூறி பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனை தொடர்ந்து மதுரை மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரம்யாவிற்கு மூன்று மணிநேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக ஊசி வெளியே எடுக்கப்பட்டது.

 

இதுகுறித்து சுகாதாரத் துறை இணை இயக்குனர் குமரகுருபரன்னிடம் கேட்டபோது தாய்சேய் நல அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் மற்றொரு குழு மதுரை அனுப்பப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

 

இதற்கிடையில் இளம் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த செவிலியர் சத்தியபாமா, அன்பு ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவிட்டிருக்கிறார்.சம்பவத்தின்போது பணியில் இல்லாத மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கவும் சுகாதாரத் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


Leave a Reply