சென்னையில் ஜேப்பியார் கல்வி குழும நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 4 நாட்களாக நடத்திய சோதனையில் 350 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஜேப்பியார் கல்வி குழுமத்திற்கு சொந்தமான 32 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 7ஆம் தேதி சோதனையை துவக்கினர்.
சூளைமேடு ரயில்வே காலனியில் உள்ள பனிமலர் பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரி, அண்ணா நகர் ஜெ பிளாக்கில் உள்ள குழுமத்தின் தலைவரின் வீடு, அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகள், சிமெண்ட், பால், குடிநீர் மற்றும் நீர் உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் சோதனைகள் நடத்தப்பட்டன .நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் 350 கோடி ரூபாய் வருவாய் ஜேப்பியார் நிறுவனம் கணக்கில் காட்டவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 கோடி ரூபாய் ரொக்கப்பணம் 3 கோடி ரூபாய்க்கும் மேலான மதிப்புள்ள தங்க நகைகள் ஆகின கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
தொடர்ந்து நான்கு நாட்கள் நடத்தப்பட்ட சோதனை தற்காலிகமாக முடிவுக்கு வந்திருப்பதாக வருமானவரித்துறை கூறியுள்ளது.