பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு !

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் பதவிக்காலம் இந்த மாதத்தோடு நிறைவடைய உள்ள நிலையில் தமிழக அரசு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.

 

அதில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் பொன்மாணிக்கவேல் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தனி அதிகாரி என்ற பொறுப்பில் நீதிமன்ற உத்தரவுப்படி பொன்மாணிக்கவேல் சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வந்தாலும் அது தொடர்பான விவரங்களை தமிழக அரசின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் தலைமை அதிகாரியான அபய் குமார் சிங்கிடம் பகிர வேண்டும் என அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

ஆனால் விசாரணை விவரங்களையோஅதன் ஆவணங்களையோ பொன்மாணிக்கவேல் தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவிடம் பகிர்ந்து கொள்ளாதது நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய செயல் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. பதவிக்காலம் முடியும் நவம்பர் 30திற்குள் வழக்கு தொடர்பான ஆவணங்களை தமிழக காவல்துறையின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் சமர்ப்பிக்க பொன்மாணிக்கவேலுக்கு உத்தரவிடவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

மேலும் சிலை கடத்தல் தடுப்பு தொடர்பான ஆலோசனைகளை பொன்மாணிக்கவேல் பங்கேற்பதில்லை என்றும் மற்றவர்களை பங்கேற்க விடுவதில்லை என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. மேலும் அந்த மனுவில் தமிழக அரசுக்கு எதிரான வாதங்களை முன்வைத்து வரும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கில் தொடர்புடைய அதிகாரிகளை மிரட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply