நடப்பாண்டில் 4வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை – டெல்டா விவசாயிகள் ‘குஷி’

கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பாண்டில் 4-வது முறையாக 120 அடியை எட்டியுள்ளது. இதனால், டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

கர்நாடகவில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்ததால், அங்குள்ள கபினி , கிருஷ்ணராஜசாகர் மற்றும் ஹேரங்கி உள்ளிட்ட அணைகள் நிரம்பியுள்ளன. இதையடுத்து, அங்குள்ள அணைகளின் உபரிநீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், நடப்பாண்டில் மட்டும் மேட்டூர் அணை நான்காவது முறையாக தற்போது நிரம்பியுள்ளது.

 

கடந்த செப்டம்பர் மாதம் 7, 24 மற்றும் அக்டோபர் 23- ஆகிய தேதிகளில் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அணை கட்டிய பிறகு நிரம்புவது, இது 45வது முறையாகும். மேட்டூர் அணையில் தற்போது 93.47 டிஎம்சி தண்ணீர் நீர் இருப்பு உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 21,946 கன‌அடியாக அதிகரித்துள்ளது.

 

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 20,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Leave a Reply