சென்னையில் 13 வயது சிறுமி கொடூரக் கொலை…!
சென்னையில் 13 வயது சிறுமியை கொடூரமாக கொல்லப்பட்டு இருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த வேதவள்ளி என்பவர் வீட்டு வேலை செய்து வருகிறார். இவரது தம்பியும் அவரது மனைவியும் உயிரிழந்து விட்டனர். அதனால் அவர்களின் மகள்களான மோனிஷா மற்றும் ஷோபனாவை வளர்க்கும் பொறுப்பை வேதவள்ளி ஏற்றுக்கொண்டார்.
மோனிஷாவிற்கு திருமணம் ஆகி விட்ட நிலையில், ஷோபனா அத்தை வீட்டிலேயே வசித்து வந்தார். அடிக்கடி வலிப்பு ஏற்பட்டதால் ஐந்தாம் வகுப்போடு ஷோபனாவின் பள்ளிப்படிப்பு நிறுத்தப்பட்டது. 13 வயதான ஷோபனாவிற்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.வீட்டில் ஷோபனா,வேதவள்ளி மற்றும் அவரது மகன் பாபு ஆகியோர் வசித்து வந்தனர். பாபு கூலி வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் வேதவள்ளி வீட்டு வேலைக்கு சென்று விட்டார். அப்போது ஷோபனாவை பார்ப்பதற்காக அவரது சகோதரி மோனிஷா வந்துள்ளார். வீட்டிற்குள் சென்ற அவர் உடலில் 10 இடங்களில் அறுக்கப்பட்டு ஷோபனா ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அலறினார். அதை கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் ஷோபனாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஷோபனா முன்பே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆதம்பாக்கம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சோபனா மட்டும் தனியாக இருந்தபோது வேதவள்ளியின் மகன் பாபு வீட்டிற்கு வந்து சென்றதாக தெரிகிறது. அவர் தலைமறைவாக உள்ளதால் பாபு மீது காவல்துறையினரின் சந்தேக பார்வை விழுந்துள்ளது.
ஷோபனா உடல் நிலை சரி இல்லாதவர் என்பதால் அவரை மிகுந்த அக்கறையுடன் வேதவள்ளி கவனித்து வந்ததாகத் தெரிகிறது. சொந்த மகனான தம்மை விடுத்து ஷோபனாவுக்கு வேதவள்ளி அதிக முக்கியத்துவம் கொடுத்தது பாபுவிற்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.அதனால் ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக அவர் சோபனாவை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




