ஊத்துக்குளி, கொங்கு பள்ளியில் தபால் தலை, நாணயங்கள், பழைய அறிவியல் கலை பொருட்கள் கண்காட்சி

திருப்பூர் அடுத்துள்ள ஊத்துக்குளி பவர் ஹவுஸ் பின்புறம் செயல்பட்டு வரும் கொங்கு மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் தபால்தலை, நாணயங்கள் மற்றும் அறிவியல் பழைய கலைப்பொருட்கள் கண்காட்சி பள்ளியில் உள்ள அறிவியல் வளமைய வளாகத்தில் நடந்தது.

 

கண்காட்சிக்கு கொங்கு பள்ளி தலைவர் ஏ.கே.சி. தியாகராஜன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ் கண்காட்சியை தொடக்கி வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் மாணவர்கள் தங்கள் சேகரித்து வைத்து இருந்த பழைய, புதிய தபால்தலைகள், பல்வேறு வெளிநாட்டு நாணயங்கள், நோட்டுகள் மற்றும் பழைய அறிவியல் கலைப்பொருட்களை பார்வைக்கு வைத்து இருந்தனர். கண்காட்சியை கொங்கு பள்ளி மாணவர்கள் மற்றும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர்.

 

இதைத்தொடர்ந்து சூரியகிரகணம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. நிகழ்ச்சியில் பெங்களூர் ஐஸ்கோப் நிறுவன இயக்குனர் ஆர். பாலமோகன், ஊத்துக்குளி ஆர்.எஸ்.அரசு ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியை விஜயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழ்நாடு அறிவியல் மையத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர். பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது : சூரியகிரகணம் குறித்து உலகம் முழுவதும் ஒருவித பயம் உள்ளது. மக்கள் கிரகணத்தின் போது என்ன சம்பவம் நிகழ்கிறதோ அதை வைத்து முடிவு செய்கிறார்கள். கோவில்களையே மூடி வைத்து விடுகிறோம். அதேபோல் கிரகணத்தின்போது வெளியே செல்லக்கூடாது. சாப்பிட கூடாது. குடிநீர் குடிக்க கூடாது. குளித்துவிட்டு வர வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தவறான பிரச்சாரத்தை முன்வைக்கிறார்கள். இது முற்றிலும் தவறு. அறிவியல் அடிப்படையில் இது சாத்தியமில்லை. இதை நாம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற வேண்டும். மாணவர்கள் அறிவியலில் புதிய, புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து உலகத்துக்கு கொண்டுவர வேண்டும்.

130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இதுவரை 8 பேர்களுக்கு மட்டும்தான் நோபல் பரிசு கிடைத்துள்ளது. இஸ்ரேலில் திருமணம் செய்யவேண்டும் என்றால் ஏதேனும் ஒரு துறையில் டாக்டர் படிப்பு படித்து இருக்கவேண்டும். மகாத்மா காந்திக்கு 2 தடவை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இதுவரை கொடுக்கவில்லை. ஆனால் நோபல் பரிசு கொடுக்கும் நிறுவனம் மகாத்மா காந்திக்கு கொடுக்காதது எங்கள் தவறு என்று இன்று ஒப்புக்கொண்டுள்ளது. மாணவர்கள் ஒத்துழைத்து செயல்பட்டு பெரிய பெரிய பதவிக்கு வரவேண்டும். அதேபோல் கிடைக்கும் சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் நல்லபடியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

 

இந்தியாவில் சூரியகிரகணம் 1995 ஆம் ஆண்டு வந்தது. அதேபோல வருகிற டிசம்பர் 26 ந் தேதி இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் ஊட்டியில் தொடங்கி கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை வழியாக சூரியகிரகணம் ஏற்பட உள்ளது. இது ஒரு அரிய சந்தர்ப்பம். திருப்பூரில் காலை 8.06 மணிக்கு தொடங்கி 11.11 மணிக்குள் அதாவது 3 நிமிட இடைவெளிக்குள் சூரியகிரகணம் தெரியும். இதனை நாம் பாதுகாப்பு முறையை பயன்படுத்தி பார்க்க வேண்டும். ஏனெனில் சூரியகிரகணத்தன்று பூமியின் மேல்பரப்பில் ஏற்படும் அதிக அடர்த்தி காரணமாக சூரியக்கதிர்கள் தாக்குவதால், அதிக கதிர்வீச்சு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

இதனால் தான் நாம் சூரியனை நேரடியாக பார்க்கக்கூடாது. இந்த கொங்கு பள்ளியில் சூரியகிரகணத்தை பொதுமக்கள் பார்க்க பாதுகாப்புடன் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இதனை பயன்படுத்தி பொதுமக்கள் சூரியகிரகணத்தை பாதுகாப்பானப முறையில் பார்க்கலாம். என்றார். முன்னதாக ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் படிக்கும் 2 ஆம் வகுப்பு மாணவி வேல்விழி மரங்கள் குறித்தும், 4 ஆம் வகுப்பு மாணவி ரித்திகா தேவி வேலுநாச்சியாரின் வீரம் குறித்தும், 5 ஆம் வகுப்பு மாணவி ரீமா ஜோஸ்மின் இயற்கை குறித்தும் அழகான தமிழ் நடையில் பேசி அனைவரையும் அசத்தினார். முடிவில் தமிழாசிரியர் ராஜ்குமார் நன்றி கூறினார்.


Leave a Reply