பெங்களூரு புகழேந்தி ஒரு 24-ம் புலிகேசி..! டிடிவி தினகரன் காட்டம்!!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பெங்களூரு புகழேந்தி சந்தித்தது குறித்து டிடிவி தினகரன் காட்டமாக விமர்சித்துள்ளார்.புகழேந்தி, 24-ம் புலிகேசியாக உருவெடுத்துள்ளதாகவும், கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்து தானே ஆக வேண்டும் என்பது போல, இந்தச் சந்திப்பு என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.

 

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை டிடிவி தினகரன் இன்று சந்தித்துப் பேசினார். வழக்கமாக தினகரன் பெங்களூரு செல்லும் போதெல்லாம் அவருடன் உடன் செல்பவர் புகழேந்தி. ஆனால் இன்று எதிர் முகாமில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, சேலத்தில் புகழேந்தி சந்தித்துள்ள நிலையில், சசிகலாவை தினகரன் சந்தித்தது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

ஏனெனில், பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு, வழக்கு தொடர்பாக தேவையான அனைத்து உதவிகளையும் இதுவரை செய்து வந்தவர் புகழேந்தி தான். இதனால் இன்றைய சந்திப்பில் புகழேந்தி விவகாரம் குறித்து சசிகலாவுடன் தினகரன் முக்கிய ஆலோசனை நடத்தியிருப்பார் என்று தெரிகிறது.
மேலும் சிறையில் இருந்து சசிகலா விரைவில் வெளிவருவதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.

 

சிறையில் சசிகலாவைச் சந்தித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரனிடம், முதல்வர் எடப்பாடியுடன் புகழேந்தி சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த தினகரன், 24-ம் புலிகேசியாக அவர் உருவெடுத்து வருகிறார்.கத்தரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு வந்து தானே ஆக வேண்டும். அது போன்றுதான் இந்த சந்திப்பு உணர்த்துகிறது என்று தினகரன் தெரிவித்தார்.


Leave a Reply