சுகாதாரத்துறை செயலாளர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் தொடரும் என்று அரசு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஊதிய உயர்வு, மருத்துவ பணியிடங்களை குறைக்க கூடாது, உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .கடந்த ஆகஸ்ட் மாதம் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துப்பூர்வ வாக்குறுதி அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், இதுவரை கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள 18 ஆயிரம் அரசு மருத்துவர்களும் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அரசு மருத்துவர்களின் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதற்கிடையே சங்க பிரதிநிதிகள் நான்கு பேருடன் தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை மேற்கொண்டார் அதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்று அரசு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை முதலமைச்சர் அழைத்து பேசி, பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மருத்துவர்களின் போராட்டத்தால் அரசு மருத்துவமனைகளை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் இதனை முதலமைச்சரோ, சுகாதாரத்துறை அமைச்சரோ கண்டுகொள்ளாமல் இருப்பது கவலை அளிப்பதாகவும் கூறியுள்ளார். மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபடுவதை கைவிட்டு முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி தங்களது நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.