திருப்பூரில் சொத்துக்காக கொலை செய்யப்பட்ட 3 பேர்!

திருப்பூர் அருகே சொத்துக்காக தம்பதி கொன்று புதைக்கப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு இன்னும் போகவில்லை. ஆனால் அதற்கு முன்னரே அங்கு மூதாட்டி ஒருவரும் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அம்பலமாகியுள்ளது.சொத்து பிரச்சினையால் ஒரு வீட்டையே சுடுகாடாய் மாற்றப்பட்டு, துளியும் கருணையின்றி மூவர் அங்கு கொன்று புதைக்கப்பட்டுள்ள இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திண்டுக்கல்லைச் சேர்ந்த செல்வராஜ் – வசந்தாமணி தம்பதி படுகொலை செய்யப்பட்ட செய்தியின் மூலம்தான் மேலும் ஒரு படுகொலை நடந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது . செல்வராஜின் உடன் பிறந்த சகோதரி கண்ணம்மாளே இந்த தம்பதியருக்கு சோற்றில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். சொத்து பிரச்சனை தான் இந்த கொலைக்கு காரணம் என வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் கண்ணம்மாள், அவரின் மருமகன் நாகேந்திரன் உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், விசாரணை முடிவுக்கு வந்ததாக நினைத்தது காவல்துறை . ஆனால் அதில் மற்றுமொரு மர்மம் மறைந்து இருந்தது பின்னர் தான் தெரிய வந்தது.

 

இந்நிலையில் நாகேந்திரனின் சகோதரி நாகேஸ்வரி, வெள்ளகோவில் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் ஐந்து மாதங்களுக்கு முன் கண்ணம்மாவின் வீட்டிற்கு சென்ற தனது தாய் ராஜாமணி, அன்று முதல் காணவில்லை என தெரிவித்திருந்தார். சந்தேகம் அடைந்த காவல்துறையினர், கண்ணம்மாளிடம் விசாரணை நடத்திய போது தான் ராஜாமணியை ஏற்கனவே கொன்று புதைத்து விட்டதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார் .

அதற்கு சதித்திட்டம் தீட்டிக் கொடுத்தது கண்ணம்மாளின் மகள் பூங்கொடி என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. பூங்கொடிக்கும் அவரது மாமியாருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்துள்ளது. அதனால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்த பூங்கொடி, மாமியாரிடம் பாசமாக பேசி வீட்டிற்கு அழைத்துள்ளார். வீட்டிற்கு வந்த ராஜாமணிக்கும் பூங்கொடிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த பூங்கொடி அரிவாளை எடுத்து ராஜாமணி வெட்டியுள்ளார். அதற்கு உடந்தையாக இருந்த கண்ணம்மாள் ராஜாமணி கழுத்தை நெரித்து கொலை செய்தார் என்பது காவல்துறை தரப்பு தகவல் .சம்பவம் நடந்த அன்று அந்த ஊரில் திருவிழா நடந்து கொண்டிருந்ததால் பெரும்பாலோனோர் கலைநிகழ்ச்சிகளை பார்க்க சென்று விட்டனர். அந்த நேரத்தில் மூதாட்டியின் சடலத்தை யாருக்கும் தெரியாமல் வீட்டின் அருகே குழி தோண்டி புதைத்துள்ளனர். இப்போது காவல்துறையினர் பூங்கொடியை கைது செய்துள்ளனர்.

 

இந்தக்கும்பல் எத்தனை கொலை செய்து இருக்கிறதோ என்ற சந்தேகத்தில், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.


Leave a Reply