அதிமுகவில் சேருகிறார் பெங்களூரு புகழேந்தி..? முதல்வர் எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு!!

டி.டி.வி.தினகரனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அமமுகவில் இருந்து ஒதுங்கியிருக்கும் பெங்களூரு புகழேந்தி, சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திடீரென சந்தித்தார். இதனால் அவர் அதிமுகவில் இணைவார் என்று கூறப்படுகிறது.

 

பெங்களூரு புகழேந்தி.. இவர் ஜெயலலிதா காலத்தில் கர்நாடக மாநில அதிமுக செயலாளராக இருந்தவர். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் ஏற்பட்ட குழப்பத்தில், டிடிவி தினகரனுடன் கைகோர்த்தார். அமமுக வில் முக்கியப் பொறுப்பாளராகவும் இருந்தார். ஓசூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் அமமுக சார்பில் போட்டியிட்டு படுதோல்வியும் அடைந்தார்.

 

இந்தத் தோல்விக்குப் பிறகு, அமமுக கட்சியே கலகலக்க ஆரம்பித்தது.தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தங்க. தமிழ்செல்வன் தொடங்கி அமமுக கட்சியின் முக்கியப் புள்ளிகள் பலரும் திமுக, அதிமுக என கட்சிதாவினர்.

இது போல பெங்களூரு புகழேந்தியும், தினகரனுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்ததாகவும் கூறப்பட்டது. அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் சிலருடன், தினகரன் குறித்து தாறுமாறாக புகழேந்தி விமர்சிக்கும் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியான தன் மூலம் இது வெளிச்சத்துக்கு வந்தது.

 

இதன் பின்னர் புகழேந்தி குறித்து தினகரன் விமர்சிக்க , பதிலுக்கு புகழேந்தியும் விமர்சிக்க உரசல் முற்றியது.புகழேந்தியும் கட்சியிலிருந்து ஒதுங்கியிருந்தார். அவர், அதிமுகவில் மீண்டும் இணைவார் என்றும் கூறப்பட்டது.

 

இந்நிலையில் இன்று, சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவருடைய இல்லத்தில் திடீரென புகழேந்தி இன்று சந்தித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி, விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிமுக அமோக வெற்றி பெற்றதற்காக முதல்வரைச் சந்தித்து வாழ்த்து கூறினேன். சசிகலா சிறை செல்ல நேரிட்ட போது 2 பேரிடம் கட்சி, ஆட்சிப் பொறுப்புகளை ஒப்படைத்துச் சென்றார். அதில் ஒருவரான எடப்பாடி பழனிசாமி, கட்சியையும், ஆட்சியையும் திறம்பட வழிநடத்திச் செல்கிறார். துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் வைக்கப்பட்ட மற்றொருவர் (தினகரன்) நிலைமை எப்படி என்பது தெரிந்து விட்டது என்று டிடிவி தினகரனை மறைமுகமாக சாடினார்.

 

இதன் பின், அதிமுகவில் சேருவீர்களா? என்று கேட்டதற்கு, பொறுத்திருந்து பாருங்கள்.உங்களிடம் சொல்லி விட்டுத்தான் செல்வேன் என்று மழுப்பலாக பதிலளித்தார். இதனால் புகழேந்தி அதிமுகவில் சேருவது உறுதி என்றே தெரிகிறது.


Leave a Reply