ராஞ்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தெ.ஆப்பிரிக்காவை இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது இந்தியா. இதன் மூலம் தொடரையும் 3-0 என்ற கணக்கில் வென்று தெ.ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்து இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, சமீப காலமாக வெற்றி மேல் வெற்றி என தொடர் வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. வெ.இண்டீசில், அந்த அணியை டி20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர் என அனைத்து போட்டிகளிலும் வென்று கோஹ்லி படை சாதித்தது.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தெ.ஆப்ரிக்க அணியையும் கோஹ்லி படை துவம்சம் செய்து வருகிறது. முதன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. தொடர்ந்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 3-0 என்ற கணக்கில் இப்போது வென்று, தெ.ஆப்ரிக்காவை ஒயிட்வாஷ் செய்துள்ளது இந்திய அணி.
விசாகப்பட்டினம், புனேவில் நடந்த முதல் இரு போட்டிகளில் அபார வெற்றியை பதிவு செய்த நிலையில், இன்று ராஞ்சியில் முடிவடைந்த 3-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன்களை குவித்தது. தொடர்ந்து ஆடிய தெ.ஆப்ரிக்க அணி, முதல் இன்னிங்சை 162 ரன்களில் இழந்தது. இதனால் பாலோ ஆன் பெற்று தொடர்ந்து ஆடிய தெ.ஆ.அணி, நேற்று 3-ம் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து பரிதாபமான நிலையில் இருந்தது.
இன்று 4-ம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், ஒரு ரன் மட்டுமே சேர்த்த நிலையில் அடுத்த 9 நிமிடங்களிலேயே தெ.ஆப்ரிக்காவின் கதை முடிந்தது. ஆட்டத்தின் 2-வது ஓவரை வீசிய இந்திய வீரர் நதீம் அடுத்தடுத்த பந்துகளில் எஞ்சிய இரு விக்கெட்டுக்களையும் வீழ்த்த, தெ.ஆ.அணி 133 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 3 -0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
இந்தப் போட்டியில் இரட்டை சதம் விளாசிய ரோகித் சர்மா ஆட்ட நாயகன் விருது பெற்றார். அது மட்டுமின்றி இந்தத் தொடரில் மேலும் இரு சதங்கள் விளாசி அதிக ரன்களை குவித்த ரோகித் சர்மாவே தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரை 2-0 என கைப்பற்றியதுடன், தற்போது தெ.ஆப்ரிக்காவுக்கு எதிரான இந்தத் தொடரையும் 3-0 என கைப்பற்றியதன் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்கிறது . தொடர்ந்து 5 போட்டிகளில் வென்று, 240 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இந்தியா முதலிடம் வசிக்கிறது. அடுத்த இரு இடங்களில் நியூசிலாந்தும், இலங்கையும் தலா 60 புள்ளிகளுடன் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.