60 நாட்களுக்கு பிறகு ப.சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் .. ஆனாலும் விடுதலையாவதில் சிக்கல்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு 60 நாட்களுக்கு பிறகு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அமலாக்கத்துறையினரின் காவலில் இருப்பதால், ப.சி., சிறையிலிருந்து வெளிவருவதில் சிக்கல் நீடிக்கிறது.

 

ஜஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ தரப்பு, கடந்த ஆகஸ்ட் 21-ந் தேதி கைது செய்தது. அவரை சிபிஐ காவலில் எடுத்து விசாரித்த பின், கடந்த செப்டம்பர் 5-ந் தேதி முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ப.சிதம்பரம் பல முறை ஜாமீன் கோரியும் மறுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் கடந்த 17-ந் தேதி முடிவடைய இருந்தது. ஆனால் இதே ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், மத்திய அமலாக்கத்துறை அவரை கடந்த 16-ந் தேதி கைது செய்தது. தற்போது அமலாக்கத்துறையினர் அவரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அமலாக்கத்துறையின் காவல் வரும் 24-ந் தேதி தான் முடிவடைய உள்ளது.

 

இதற்கிடையே சிபிஐ தொடர்ந்த வழக்கில், கைது செய்யப்பட்டு 60 நாட்களுக்குப் பிறகு ப.சி.,க்கு இன்று நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம் .ஒரு லட்சம் ரூபாய் பிணைத் தொகை மற்றும் இரு நபர்கள் உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்றும், பாஸ்போர்ட்டை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிபதி பானுமதி தலைமையிலான உச்சநீ திமன்ற அமர்வு ப.சி.,க்கு ஜாமீன் வழங்கியது. வேறு எந்த வழக்கிலும் கைது செய்யப்படாமல் இருந்தால் அவரை உடனே விடுதலை செய்யலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆனால், அமலாக்கத்துறையினரின் காவலில் ப.சி., இருப்பதால், அவர் உடனடியாக விடுதலையாவதில் சிக்கல் நீடிக்கிறது. அமலாக்கத்துறை கஸ்டடி முடிந்து வரும் 24-ந் தேதி தான் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். எனவே, அமலாக்கத்துறை வழக்கிலும் ஜாமீன் கிடைக்கும் பட்சத்தில் மட்டுமே அவர் வெளியில் வரமுடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இல்லையெனில் 24-ந் தேதி மீண்டும் திகார் சிறைக்கு ப.சிதம்பரம் அனுப்பப்படுவார் என்றே தெரிகிறது.


Leave a Reply