திருப்பூர் அருகே சொத்திற்காக உடன்பிறந்த சகோதரனை கொன்றதாக கைது செய்யப்பட்ட பெண் மற்றொரு உறவினரையும் கொலை செய்தாரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லைச் சேர்ந்த செல்வராஜ் – வசந்தாமணி தம்பதியினர் தனது மகனுக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்திருந்தனர். மகனின் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் உள்ள தனது சகோதரி கண்ணம்மா வீட்டிற்கு செல்வராஜும் வசந்தாமணியும் கடந்த வாரம் சென்றனர். ஆனால் அதன் பின் இருவரும் வீடு திரும்பவில்லை.
இருவரும் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசாரின் விசாரணையில் செல்வராஜின் சகோதரி கண்ணம்மாவும் அவரின் மருமகன் நாகேந்திரனும் சேர்ந்து இருவரையும் கொலை செய்து வீட்டருகிலேயே புதைத்து வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கண்ணம்மாவையும் அவருடைய மருமகன் நாகேந்திரனையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
போலீசாரின் விசாரணையில், சொத்துக்காக சகோதரனையும், அவருடைய மனைவியையும் கண்ணம்மா தீர்த்துக் கட்டியது தெரிய வந்ததுடன் மேலும் ஒரு திருக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
கண்ணம்மாவின் மருமகன் நாகேந்திரனின் தாயை கடந்த இரண்டு மாதமாக காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது. எனவே அவரையும் இவர்கள் இருவரும் கொலை செய்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருவதால், இந்த வழக்கில் மேலும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.