ப.சிதம்பரத்தை கைது செய்தது நானில்லை. அதே போல் என்னை கைது செய்ததற்கும் ப.சிதம்பரம் காரணமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளித்துள்ளார்.மத்தியில் இரண்டாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்தவுடன், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீதான ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு, ஐஎன்எக்ஸ்மீடியா முறைகேடு வழக்குகளில் சிபிஐயும், அமலாக்கத்துறையும் தீவிரம் காட்டி வருகின்றன. முதலில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு 55 நாட்கள் காவலில் வைக்கப்பட்ட ப.சி.யை நேற்று அமலாக்கத்துறையும் கைது செய்துள்ளது.
ப.சிதம்பரத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலைமையை, அவர் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த போது தற்போதைய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கைது செய்த சம்பவத்துடன் ஒப்பிட்டு பரபரப்பாக செய்திகள் வெளியாகின. அன்று ப.சிதம்பரம் செய்ததை இன்று அமித் ஷா பதிலுக்கு பழி தீர்க்கிறார் என்றெல்லாம் ஒப்பிட்டு அன்று.. இன்று.. என்று உதாரணம் காட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா இதற்கு விளக்கமளித்துள்ளார். அதில், ப.சிதம்பரத்தைக் கைது செய்ததற்கு நான் காரணமில்லை. சிபிஐ, அமலாக்கத் துறை ஆகிய இரண்டுமே என்னுடைய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படவில்லை. அதேபோன்றுதான் ப.சிதம்பரமும் என்னைக் கைது செய்யவில்லை. அவர், உள்துறை அமைச்சராக இருந்தபோதும் சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை அவருக்குக் கீழ் செயல்படவில்லை.
என்னை போலி என்கவுன்டர் வழக்கில் கைதுசெய்தனர். பின்னர் நீதிமன்றம் என்னை குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளித்து விடுவித்து விட்டது. ஆனால் இப்போது ப.சிதம்பரமோ பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். என் வழக்கையும் ப. சிதம்பரம் வழக்கையும் ஒன்றாக ஒப்பிட முடியாது. ப.சிதம்பரம் தன்னைக் குற்றமற்றவர் என்று கருதினால், அதை நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும் என்று அமித் ஷா பரபரப்பாக தெரிவித்துள்ளார்.






