ராமேஸ்வரத்தில் மது, போதை பொருட்கள் விற்பனை தாராளம் 65 கிலோ பான் மசாலா, குட்கா பறிமுதல்

ராமேஸ்வரத்தில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் தடை செய்யப்பட்ட 65 கிலோ பான் மசாலா , குட்கா போதை பொருள் சிக்கியது. விற்பனைக்காக போதை பொருட்களை பதுக்கி வைத்த கிட்டங்கி உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

பன்முக கலாசாரம் கொண்ட தேசிய புண்ணிய தலமான ராமேஸ்வரத்தின் புனிதம் காக்க பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் சட்ட விரோத மது விற்பனை 24 மணி நேரமும் நடைபெற்று வருகிறது. சில்லரை மது விற்பனையாளர் ஒருவருக்கு செலவு ரூ.50 ஆயிரம் நீங்கலாக ரூ.ஒரு லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது. இது ஒருபுறமிருக்க, ராமேஸ்வரம் தீவு பகுதியில் பான் மசாலா, குட்கா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட போதை லாகிரி வஸ்துகள் அதிகளவில் விற்கப்படுவதாக ராமேஸ்வரம் நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 

இதனடிப்படையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் காந்தி நகரில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பாலசுப்ரரமணியன் என்பவருக்கு சொந்தமான கிட்டங்கில் 65 கிலோ பான் மசாலா மற்றும் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் 9 மூடைகளில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போதை லாகிரி வஸ்துகளை பறிமுதல் செய்த போலீசார் கிட்டங்கி உரிமையாளர் பாலசுப்பிரமணியன் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

 

தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பாக்கெட்களை பண்டல் கணக்கில் மதுரையில் இருந்து லாரி மூலம் ராமேஸ்வரம் கொண்டு வந்து தீவு முழுவதும் உள்ள சிறு கடைகளுக்கு விற்பனைக்காக குட்கா விநியோகித்தது தெரிந்தது. சோதனையில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போதை பொருட்கள் விற்பதாக தெரிய வந்தால் கடை உரிமை ரத்து செய்யப்பட்டுடு கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளார். கிட்டங்கியில் பறிமுதல் செய்த பான்மசாலா, குட்கா பொருட்களின் மதிப்பு ரூ. 30 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர்.


Leave a Reply