மேம்பாலத்தில் இருந்து சடலம் இரக்கப்பட்ட விவகாரத்தில் பட்டியலின மக்களுக்கு தனி மயானத்தை அரசு அமைத்திருப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி கூறியுள்ளது. வேலூர் மாவட்டம் நாராயணபுரத்தில் உயிரிழந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த குப்பன் என்பவரின் உடலை அடக்கம் செய்ய எடுத்துச் சென்றபோது வேறு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் மேம்பாலத்தில் இருந்து கயிறு கட்டி உடல் இறக்கப்பட்டு மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்த செய்தியின் அடிப்படையில் நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது இது குறித்து பதிலளிக்க வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு ஆணையிடப்பட்டது.
வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது, நாராயணபுரத்தில் ஆதிதிராவிடர்களுக்கு தனி மயானம் அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆதிதிராவிடர்களுக்கு என்று தனி அரசு அலுவலகங்கள் இல்லாத நிலையில், தனி மயானத்தை அரசே அமைத்துக் கொடுப்பது சாதிப் பிரிவினையை ஊக்குவிப்பது போல் உள்ளதாக நீதிபதிகள் அதிருப்தி கூறினர்.இச்சம்பவத்தின் மீதான அரசியல் நடவடிக்கைகள் குறித்து வரும் புதன் அன்று அறிக்கை அளிக்க ஆட்சியருக்கும், வட்டாட்சியருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.