கனமழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நீலகிரிக்கு உடனடியாக ரூ.1000 கோடி நிதியுதவி வழங்கி சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று முதல்வர் பழனிசாமிக்கு மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகஸ்ட் 11, 12 ஆகிய நாட்களில் நீலகிரி மாவட்டத்திற்கு சென்றபோது, கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் – மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரண உதவிகள் குறித்தும் தமிழக முதலமைச்சருக்கும் – தமிழக அரசின் தலைமைச்செயலாளருக்கும் எழுதிய கடிதத்தினை, கழக சட்டமன்ற உறுப்பினர்கள் பி.கே.சேகர்பாபு, எம்.எல்.ஏ., மா.சுப்பிரமணியன், எம்.எல்.ஏ., ஆகியோர் நேரில் சந்தித்து அளித்தனர்.
அந்த கடிதத்தில், கனமழையினால், நீலகிரி மாவட்டமே நிலைகுலைந்து போயிருப்பதையும், அதன் காரணமாக ஆயிரக் கணக்கான மக்கள் அனுபவிக்கும் துயரத்தையும்,பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் அம்மாவட்டத்தில் இரு தினங்கள் நேரில் பார்வையிட்ட போது கண்டு மிகுந்த மன வேதனையுற்றேன்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, கூடலூர், பன்டலூர் ஆகிய வட்டங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. கூடலூர் சட்டமன்ற தொகுதியே காணாமல் போய் விடும் அளவிற்கு அடையாளங்கள் சிதைந்து, பாதிப்பு கடுமையாக இருக்கிறது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்- தங்களின் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு- 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கனமழையிலும், மண்சரிவுகளிலும் சிக்கிக் கொண்டு உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பிச் செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.
ஆகவே கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சாலை உட்கட்டமைப்பைச் சீரமைக்கவும், மண்சரிவுகளால் வீடுகளை இழந்து தவிப்போருக்கு புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கவும் நீலகிரி மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 1000 கோடி ரூபாய் நிதியுதவி அறிவிக்க வேண்டும். இது போன்ற பாதிப்புகள் நீலகிரி மாவட்டத்தில் ஏற்படாமலிருக்க ஒரு “வல்லுநர் குழு” அமைத்து – உரிய சிறப்புத் திட்டம் ஒன்றை உருவாக்கி- அதை முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்திட அரசு முன்வர வேண்டும் என்றும்; பாதிக்கப்பட்டோர்க்கான அரசு நிவாரண உதவிகளை, அனைத்துக் கட்சிக் குழு அமைத்து அந்தக்குழுவினர் முன்னிலையில் வழங்கிட வேண்டும் என்றும்; வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கடிதம் எழுதியுள்ளார்.